News
நாளை முழு ஊரடங்கு: இன்றே அசைவம் வாங்க குவிந்த பொதுமக்கள்

ஜூலை மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்துள்ளதால் ஞாயிறு அன்று அசைவம் சாப்பிடுபவர்கள் சனிக்கிழமை இரவே சிக்கன், மட்டன், மீன் ஆகியவற்றை விடிய விடிய வாங்கிய செய்தியை கடந்த வாரம் பார்த்தோம்
இந்த நிலையில் இந்த வாரம் சுதாரிப்பாக இன்று காலைமுதலே அசைவ கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக சென்னை காசிமேடு மீன் விற்பனை சந்தையில் இன்று அதிகாலை முதலே வியாபாரிகளும் வாடிக்கையாளர்களும் திரண்டுள்ளனர்.
கடந்த 3 நாட்களாக மீன் விற்பனை காசிமேடு மீன் சந்தையில் தொடங்கியுள்ள நிலையில், நாளை ஞாயிறன்று முழு ஊரடங்கு என்பதால், இன்று அதிகாலை முதலே மொத்த வியாபாரிகள் காசிமேட்டில் கடை போட தொடங்கிவிட்டனர்.
கடந்த 15ஆம் தேதி முதல் மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற நிலையில், மீன்களின் வரத்து அதிகம் இருப்பதால் மீன் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் காசிமேடு மீன் பிடி துறைமுகம் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதால், பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
