வாட்ஸ்அப்பில் அவதூறான செய்தியை பரப்பியதாக கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
லாகூரிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இஸ்லாமிய காலனி பஹவல்பூரில் வசிப்பவர் 19 வயதான நௌமன் மசிஹ். இவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் கடவுள் குறித்து அவதூறு பரப்பும் விதமாக செய்தி பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுசம்பந்தமான வழக்கு பாகிஸ்தானின் பஹவல்பூர் நகரில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி விசாரணையின் போது, அரசு தரப்பில் இருந்து நௌமன் மசிஹ் வாட்ஸ்அப் மூலமாக அவதூறான கருத்துக்களை பரப்பியதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இதனையடுத்து வாட்ஸ்அப் மூலம் அவதூறு கருத்து பரப்பிய குற்றத்திற்காக நௌமன் மசிஹித்திற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானை பொறுத்தவரை அவதூறு பரப்புவது கடும் குற்றமாக கருதப்படுகிறது. ஏனெனில் அவதூறு கருத்துக்களை நம்பி அப்பாவி மக்கள் அடித்து கொல்லப்படும் சம்பவங்கள் அங்கு அடிக்கடி அரங்கேறுவதால் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமாக உள்ளது.
இதற்கு முன்னதாக மார்ச் 24, 2023 அன்று, வாட்ஸ்அப் குழுவில் அவதூறான உள்ளடக்கம் தொடர்பாக பாகிஸ்தானில் ஒரு முஸ்லீம் நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பெஷாவர் நீதிமன்றத்தால் மின்னணு குற்றங்கள் தடுப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார்.