2 வருஷ தடைக்கு பிறகு.. ஐபிஎல் கோப்பையை ஜெயிச்சாலும் சிஎஸ்கேவுக்கு கைகூடாமல் இருக்கும் ஒரே ஒரு விஷயம்..

தோனியின் ஃபேர்வெல் சீசன், சேப்பாக்கத்தில் ஃபைனல் என பல்வேறு விஷயங்கள் சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருந்த நிலையில், அவற்றை எல்லாம் எதிர்பார்த்து காத்து வந்த அவர்களுக்கு இந்த சீசன் மிகப்பெரிய ஏமாற்றமாக தான் அமைந்திருந்தது.

ஐபிஎல் தொடரிலேயே நம்பர் ஒன் அணியாக விளங்கி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் தோனிக்கு பதிலாக ருத்துராஜ் தலைமையில் களமிறங்கி இருந்தது. தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் அவர் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் ஆட வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் விருப்பமாகவும் இருந்து வந்தது.

ஆனால் 42 வயதாகும் தோனியின் கால் பகுதியில் காயம் அதிகமாக இருந்ததால் அவரால் இனிவரும் சீசன்களில் தொடர்ந்து ஆட முடியாது என்ற தகவலும் வெளியாகி இருந்தது. இதனால் நடப்பு சீசனிலேயே அவர் மிகச் சிறப்பாக ஆடி சிஎஸ்கே அணி மீண்டும் ஒருமுறை வெற்றி பெற்று கோப்பையுடன் அவருக்கு ஒரு நல்ல ஃபேர்வெல்லை கொடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

ஆனால் முதல் பாதி லீக் போட்டியை சிறப்பாக கையாண்டு வெற்றிகளை குவித்து வந்த சிஎஸ்கே அணி, இரண்டாவது பாதியில் சில தொடர் தோல்விகளை சந்திக்க நேரிட்டதால் பிளே ஆப் முன்னேறும் வாய்ப்பையும் கடைசி போட்டியில் இழந்திருந்தனர். பெங்களூருவில் நடந்த கடைசி போட்டியுடன் சிஎஸ்கே லீக் சுற்றும் முடிவுக்கு வந்திருந்த நிலையில் தோனி இந்த சீசனில் ஓய்வு பெறுவாரா, மாட்டாரா என்பது பெரிய கேள்வியாக இருந்து வந்தது.

ஆனால் ஐபிஎல் ஃபைனல் முடிந்து விட்டாலும் இதுவரைக்கும் தோனியின் ஓய்வு பற்றி எந்தவித தகவலும் வெளியே வரவில்லை. இதற்கிடையே தான் இரண்டு ஆண்டு தடை முடிந்த பின்னர் சிஎஸ்கே அணி 3 முறை கோப்பையை கைப்பற்றினாலும் ஒரு முறை கூட நடக்காமல் இருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம்.

கடந்த 2016 மற்றும் 17 ஆகிய ஆண்டுகளில் சிஎஸ்கே அணி ஐபிஎல் ஆட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு முன்பு வரை ஆறு முறை அவர்கள் ஃபேர்ப்ளே விருதுகளை வென்றிருந்தனர். ஆனால் தடை முடிந்த பின்னர், 2018 முதல் தற்போது வரை தொடர்ந்து ஆடிவரும் சிஎஸ்கே அணி இந்த ஏழு சீசன்களில் ஒரு முறை கூட ஃபேர்ப்ளே விருதை வெல்லவில்லை.

ஒழுக்கமாக ஆடுவது, சரியான நேரத்தில் பந்து வீசி முடிப்பது, வீரர்களின் நன்னடத்தை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களின் அடிப்படையில் ஃபேர்ப்ளே விருது கொடுக்கப்பட்டு வரும் நிலையில் சிஎஸ்கே அணி நல்ல அணியாக இருந்தும் 7 ஆண்டுகளாக இந்த விருதை வெல்லாமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிகம் கேள்விகளை தான் ஏற்படுத்தி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...