News
ஊரடங்கு வறுமை எதிரொலி: கஞ்சா தொழிலுக்கு மாறிய சென்னை மாணவர்கள்

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட வறுமை காரணமாக கஞ்சா விற்கும் தொழிலில் மாணவர்கள் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா அதிகம் புழங்குவதாக போலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை விருகம்பாக்கத்தில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. அப்போது கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியில் 18 கிலோ கஞ்சா பிடிபட்டது
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆந்திராவைச் சேர்ந்த ஐசக் என்பவர் மொத்தமாக கஞ்சா வாங்கி சென்னையில் உள்ள மாணவர்களுக்கு சப்ளை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது
கொரோனா ஊரடங்கு சூழல் காரணமாக வறுமையில் இருக்கும் மாணவர்களை மூளைச்சலவை செய்து கஞ்சா விற்பனை செய்தால் ஒரு கிலோவிற்கு ரூ.8000 கமிஷனாக கிடைக்கும் என்று கூறி மாணவர்களிடையே கஞ்சா விற்பனையை அதிகரிக்க செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக குடும்பத்தில் வேலையின்றி பெற்றோர்கள் இருப்பதால் மாணவர்கள் இந்த தொழிலை செய்து உள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து 13 பேர்களை கைது செய்துள்ளதாகவும் 9 செல்போன்கள் மற்றும் பைக்குகள் பறிமுதல் செய்துள்ளதாகவும் கல்லூரி மாணவர்களிடம் மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் போதைப் பொருள் விற்பனையால் ஏற்படும் விளைவுகள் குறித்து கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வையும் போலீசார் ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
