#Breaking மக்களே உஷார்; டிச.25ல் வெளுத்து வாங்கப்போகும் கனமழை – எங்கெல்லாம் தெரியுமா?

நேற்று தெற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (21-12-2022) தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன்பிறகு இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இன்று முதல் டிசம்பர் 23ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், டிசம்பர் 24ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 25ம் தேதி அன்று, தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.