தென் தமிழக மாவட்டங்களில் இன்று பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மாண்டஸ் புயல் ஓய்ந்த நிலையில், சில நாட்களுக்கு வெயில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று காலை முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும், நேற்று காலை 11 மணி அளவில் லேசான சாரல் மழையாகத் தொடங்கி, பகல் முழுவதும் விட்டுவிட்டு மிதமான மழை பெய்தது. சில பகுதிகளில் கனமழையும் பெய்தது.
இதையடுத்து, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் மழை வாய்ப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடக்கு கேரளா மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, டிச. 13-ம் தேதி (இன்று) தென் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளிலும், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
டிச. 14, 15, 16-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்யக் கூடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.