சென்னையில் வெளுக்க போகுது மழை.. கோவை நீலகிரிக்கு மஞ்சள் எச்சரிக்கை.. வானிலை மையம் வார்னிங்

சென்னை: தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் ஜூன் மாதத்தில் வழக்கத்தை விட 115 சதவீதம் மழை அதிகமாக பெய்திருப்பாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வழக்கமாக கேரளா மற்றும் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கும். இக்காலகட்டத்தில் அதிகமாக மழை பொழிவு கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தான்இருக்கும். ஆனால் இந்த முறை அங்கு குறிப்பிடும்படியாக மழை பெய்யவில்லை. ஆனால் தமிழகத்தில் பருவமழை தீவிரமாக இருந்தது. இதன் காரணமாக, கடந்த ஜூன் 1 முதல் 30-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 109 மி.மீ மழை பெய்திருக்கிறது.

தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 417 சதவீதம், விருதுநகர் மாவட்டத்தில் 292 சதவீதம், திருச்சி மாவட்டத்தில் 249 சதவீதம், கரூர் மாவட்டத்தில் 246 சதவீதம், தேனி மாவட்டத்தில் 238 சதவீதம், ராமநாதபுரம் மாவட்டத்தில் 216 சதவீதம், சென்னை மாவட்டத்தில் 210 சதவீதம், புதுக்கோட்டையில் 201 சதவீதம் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில்தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள காரணத்தால் தமிழகத்தில் சென்னை, கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் இன்று கூறியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் ஜூலை 4ம் தேதியான இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று ஜூலை 4ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோல் துவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒருசில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கனமழையை பொறுத்தவரை நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ஜூலை 5ம் தேதியான நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஜூலை 6 முதல் 10ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

சென்னை வானிலை நிலவரம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். மாநகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36°-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: தமிழக கடலோர பகுதிகளில் இன்று ஜூலை 4 முதல் ஜூலை 8 வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீச வாய்ப்பு உள்ளது. வங்கக்கடல் பகுதிகளை பொறுத்தவரை இன்று ஜூலை 4ஆம் தேதி மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசலாம்.

தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள், மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசலாம். ஜூலை 4 முதல் ஜூலை 8 வரை மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews