தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் வட மாநிலங்களில் வெப்ப அலைகள் வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது என்பதையும் பார்த்தோம். இந்நிலையில் தமிழகத்தை பொருத்தவரை ஒரு பக்கம் வெயில் கொளுத்திக் கொண்டு இருந்தாலும் இன்னொரு பக்கம் கோடை மழை பெய்து வெப்பத்தை தணித்து வருகிறது என்பதும் இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் உள்ள கிழக்கு திசை காற்று மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி காரணமாக இன்று அதாவது மே ஒன்றாம் தேதி தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மே ஒன்றாம் தேதியான இன்று சேலம், தர்மபுரி, நீலகிரி, ஈரோடு, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 21 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் அதாவது மே ஒன்றாம் தேதி முதல் மே 3ஆம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும் ஒன்றும் மே நான்காம் தேதி சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் பல பகுதிகளில் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் மழை பெய்யும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.