பக்கிங்ஹாம் கால்வாயை மீட்டெடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை முழுமையாக பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவில் இருந்து புதுச்சேரி வரை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 2014 தொடர்ந்த வழக்கு, இன்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
கால்வாய்க்கு உள்ளேயும், கரையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆக்கிரமித்தவர்களுக்கு மறுவாழ்வு திட்டங்களை வகுக்க வேண்டும் என நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ரகுநாதன் விளக்கம் அளித்தார்.
ஆக்கிரமிப்பாளர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது என்பது, ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பது போன்றது என கருத்து தெரிவித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, ஆந்திராவில் இருந்து புதுச்சேரி வரை உள்நாட்டு நீர்வழித்தடமாக இருந்த பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் முழுவதுமாக மோசமடைந்துள்ளதாக வேதனை தெரிவித்தார்.
பக்கிங்ஹாம் கால்வாயை அழகுபடுத்தும் போது, நகரமும் அழகாகும். அதை தொடர்ந்து பராமரிப்பதில் மக்களுக்கும் பங்கு உள்ளது எனத் தெரிவித்த தலைமை நீதிபதிகள் அமர்வு, வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.
