ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் நடத்த வேண்டும் என்ற தனிநீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல இடங்களில் காந்தி ஜெயந்தி அன்று ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டமிட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்ததை தொடர்ந்து பல கட்ட நீதிமன்ற வழக்குகளைத் தாண்டி கடைசியில் 44 இடங்களில் பலவிதமான கட்டுப்பாடுகளோடு நிகழ்வை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகளை ஏற்காத ஆர்.எஸ்.எஸ். மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், சபீக் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. உள் அரங்கு கூட்டமாக நடத்துவதற்கு தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், வீதி மற்றும் சாலைகளில் அணிவகுப்பு பேரணியாக நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், காவல்துறை விதிக்கும் கட்டுப்பாடுகளை பின்பற்ற தயாராக இருப்பதாகவும் ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சட்டத்தை பேணிக்காக்கிற அதே நேரத்தில் கருத்துரிமை, பேச்சுரிமையை தடுக்காத வகையில் செயல்பட வேண்டும் என காவல்துறைக்கு அறிவுறுத்திய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்த மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும், அதனை முறையாக பரிசீலித்து அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.