சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு சர்வதேச புத்தகக் கண்காட்சியை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இந்தப் புத்தகக் கண்காட்சி ஜனவரி 6ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்த போது சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் 46 வது புத்தகக் காட்சி இந்த ஆண்டு சர்வதேச புத்தக கண்காட்சி ஆக ஜனவரி 6ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்றும் இந்த புத்தக கண்காட்சியை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
800 அரங்குகள் இந்தப் புத்தகக் கண்காட்சிக்காக அமைக்கப்பட்டுள்ளதாகவும் 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச புத்தகக் காட்சிக்கு என ஏசி வசதி உள்ள அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறும் என்றும் இதில் அனைத்து புத்தக பதிப்பாளர்கள் புத்தகங்களும் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக வாசகர்கள் புத்தகக் கண்காட்சியைப் பார்க்க வருவார்கள் என்றும் இந்த ஆண்டு பொங்கலுக்கு சொந்த ஊருக்கு சென்று திரும்பியவர்கள் புத்தக கண்காட்சியை பார்க்க வேண்டும் என்ற வகையில்தான் ஜனவரி 22ஆம் தேதி வரை புத்தகக்காட்சி நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.