முதல் பாடலுக்கே இளையராஜாவுக்கு வந்த சோதனையைப் பாருங்க… ஆனாலும் மனுஷன் அசரலயே..!

இன்று இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள். கலையுலக பிரமுகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர். அவர் திரையுலகில் முதன் முதலில் அடி எடுத்து வைக்கும் போது என்னென்ன சோதனைகளைச் சந்தித்தார் என்று பார்ப்போம். சோதனைகள் தானே பின்னால் சாதனையானது. வாங்க பார்க்கலாம்…

அன்று திருவேற்காடு கோவிலில் கங்கை அமரன், பாஸ்கர் உடன் இளையராஜாவும் இருந்தார். லட்சிய கனவு நிறைவேறும் என்று அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பு கலந்த மகிழ்ச்சியுடன் இருந்தனர். அதனால் எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று கோவிலுக்கு வந்திருந்தனர்.

அர்ச்சனை முடிந்தது. தலைகுனிந்து சாமிகும்பிட்டு நிமிர்ந்த இளையராஜாவுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அம்மனின் முகத்தைப் பார்த்தார். ‘இன்னமும் உன் சோதனை காலம் முடியவில்லை மகனே’ என்றது போல இருந்தது. ஆனால் அதில் ஒரு புன்சிரிப்பும் தவழ்ந்தது. இளையராஜாவுக்கு பயம் வந்து விட்டது. இன்றைய பாடல் ஒலிப்பதிவு நல்லபடியாக நடைபெற வேண்டுமே, எதுவும் தடங்கல் வந்து விடுமோ என்று உள்ளூர அந்தப் பயம் வந்தது.

தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தை பலரும் குழப்பிவிட்டு இருந்தனர். ராஜா ராசியில்லாதவர். அதற்குப் பதிலாக எம்எஸ்வி.யை போடலாமே என்றதால் அவர் என்ன சொல்வார் என்று பயந்தனர். ஆனால் எல்லாவற்றையும் மீறி இளையராஜா மீது வைத்த அபார நம்பிக்கையால் பஞ்சு அருணாசலம் அவரை புக் செய்து விட்டார்.

Annakili
Annakili

‘ஒலிப்பதிவுக்கு வேறு நேரமாகிவிட்டதே’ என அரக்க பரக்க இளையராஜாவும், சகோதரர்களும் ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு ஓடி வந்தார்கள். ஆர்கெஸ்ட்ராவை தொடங்கும் முன் இறைவனை வேண்டினார். ‘ஒன் டூ த்ரீ’ சொல்லவும் பவர் கட் ஆனது. இது என்னடா வம்பா போச்சுன்னு மனசுக்குள் நினைத்தார். அப்போது சிலர் சகுணமே சரியில்லை என கிண்டல் செய்தனர்.

அப்போது தான் அவருக்குக் காலையில் பார்த்த அந்த அம்மனின் முகம் நினைவுக்குள் வந்து போனது. சிறிது நேரத்திற்குள் மீண்டும் மின்சாரம் வந்தது. இளையராஜா ரெடி சொல்ல ஜானகியும் ஹம்மிங் பாட அருமையாக வந்தது அந்தப் பாடல். பதிவான பாடலைக் கேட்டுப் பார்க்க டேப்பை ஆன் செய்தார்கள். ஒரு சப்தமும் வரவில்லை.

அதிர்ந்து போனார்கள். என்ன இது சகுனத்தோட 2வது தடையா? பஞ்சு அருணாசலம் பொட்டியைத் தூக்கிட்டு வீட்டுக்குப் போகச் சொல்லிவிடுவாரோ என்ற பயம் வந்துவிட்டது. அப்போது அவரோ அமைதியாக இருந்தார். மீண்டும் பாடல் ரெக்கார்டிங் தொடர்ந்தது. பாடல் ஓகே ஆனது.

அம்மனை மனதார வேண்டி விட்டு கண்ணைத் திறந்தார். அங்கு பஞ்சு அருணாசலம் மட்டுமே நின்றார். இப்போது அவருக்கு அம்மனின் புன்னகை மட்டுமே கண்முன் வந்து போனது. இதுதான் இளையராஜாவின் வெற்றிக்குப் பின்னால் உள்ள ரகசியம்.

1976ல் இளையராஜா இசை அமைத்த முதல் படமான அன்னக்கிளி வெளியானது. சிவகுமார், சுஜாதா, படாபட் ஜெயலட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பாடல்கள் அத்தனையும் சூப்பர்ஹிட் ரகங்கள். அடி ராக்காயி, அன்னக்கிளி உன்னைத் தேடுதே, மச்சான பாத்தீங்களா, சொந்தம் இல்லை ஆகிய பாடல்கள் உள்ளன.

இன்றும் கூட அவரது பாடல்கள் எத்தனையோ நபர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் மாமருந்தாக உள்ளது. இரவுப்பணிகளில் ஈடுபடுபவர்கள், கடைகளில் வேலை செய்பவர்கள் அனைவருக்குமே இளையராஜாவின் பாடல்கள் மட்டுமே இன்று வரை உற்சாக டானிக்காக இருந்து வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews