இன்று தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு; நாளை முதல் வறண்ட வானிலையே நிலவும்!
தமிழகத்தை விட்டு வடகிழக்கு பருவமழை முழுவதுமாக விலகியதற்கு பின்பு மிதமான மழை பெய்து கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெருவாரியான மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டு வருகிறது.
காரணம் குமரி கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி கடந்த சில நாட்களாக நிலவி கொண்டு இருந்தது. இதனால் தமிழகத்தில் தென் தமிழக மாவட்டங்களில் அதிகமாக மிதமான மழை கிடைத்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தலைநகர் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
