பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்!

பெண்களுக்கான திருமண வயது உயர்த்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து ஓராண்டு கடந்த நிலையில், அதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை அண்மையில் அளித்துள்ளது. இதன்படி அவர்களின் திருமண வயது ஆண்களை போல 21 ஆக உயர்த்தப்பட உள்ளது.

கடந்த, 1930ல், குழந்தை திருமண தடுப்பு சட்டம் இயற்றப்பட்டது. ‘சாரதா சட்டம்’ என்றழைக்கப்படும் இதில், பெண்களுக்கான திருமண வயது, 15 ஆகவும், ஆண்களுக்கு, 16 ஆகவும் உயர்த்தப்பட்டது. இந்த சட்டம், பின்னாளில் திருத்தம் செய்யப்பட்டு, பெண்களின் திருமண வயது, 18 எனவும், ஆண்களுக்கு, 21 ஆகவும் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் போது பேசிய பிரதமர், மோடி, ‘இளம் வயது பெண்கள், ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவதை தடுக்க, அவர்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து ஆராய, குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்றார். சமதா கட்சி முன்னாள் தலைவர் ஜெயா ஜெட்லி மற்றும் ‘நிதி ஆயோக்’ உறுப்பினர், வி.கே.பால் தலைமையில், 10 நிபுணர்கள் அடங்கிய குழு, பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்து பரிந்துரையை அரசுக்கு அளித்துள்ளது.

இந்த பின்னணியில், பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து முன்னணி ஆங்கில தினசரி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஜெயா ஜெட்லி கூறுகையில், “எங்களது பரிந்துரைகள் நிச்சயம் மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டத்தை அடிப்படையாகவோ, ஒட்டியோ எடுக்கப்பட்டது இல்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். பெண்கள் இறப்பு விகிதத்தை குறைக்கும் நோக்கத்துடன் இந்த நிபுணர் குழு மத்திய மகளில் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் அமைக்கப்பட்டது. சமீபத்தில் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு ( என்எப்ஹெச் எஸ்5) வெளியிட்டுள்ள தரவுகளின்படி பெண்களின் கருத்தரிக்கும் விகிதம் குறைந்து வருவதாகவும் மக்கள் தொகை குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இந்த முடிவு பெண்கள் முன்னேற்றம் அதிகாரமளித்தல் நோக்கத்துடன் எடுக்கப்பட்டது” என்றார்.

என்எப்ஹெச்எஸ் 5 வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நாட்டின் மொத்த கருத்தரிப்பு விகிதம் முதல் முறையாக 2.0 ஆக குறைந்துள்ளது. இது ரீபிளேஸ்மென்ட் அளவான 2.1 விட குறைவானது. எனவே வரும் ஆண்டுகளில் மக்கள் தொகை பெருக்கம் இருக்க வாய்ப்பில்லை. பால்ய விவாகம் 2015-16ம் ஆண்டில் 27 சதவீதமாக இருந்தது. இது 2019-24ம் ஆண்டுகளில் 23 சதவீதமாக குறைந்துள்ளது. 18 வயதுக்கு முந்தைய குழந்தைகள் திருமணம் வெகுவாக குறைந்துள்ளது.

நீண்ட நெடிய ஆக்கப்பூரவமான விவாதத்துக்கு பிறகே பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் பரிந்துரை எடுக்கப்பட்டதாக ஜெட்லி தெரிவித்தார். ஆண்களின் திருமண வயது21. இதையொட்டிய பெண்களின் திருமண வயதும் இருக்கும். இளம்வயதினரின் கருத்துகளும் கேட்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். குறிப்பாக புதிய முடிவால் பாதிக்கப்படும் என கருதப்பட்ட இளம் பெண்களின் கருத்துகள், விமர்சனங்கள் கேட்கப்பட்டுள்ளதாகவும் ஜெட்லி தெரிவித்தார். “ 16 பல்கலைக்கழகங்களில் கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டதன. 15 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இப்பணியில் ஈடுப்படுத்தப்பட்டன. அவை குழந்தைகள் திருமணம் அதிகம் நடக்கும் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள கிராமப்புறங்கள் மற்றும், விளிம்பு நிலை சமுதாயங்களை தொடர்பு கொண்டு கருத்துகளை கேட்டறிந்தன. கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மதம் சார்ந்த அமைப்புகளிடம் சரிசமமாக கருத்துகள் கேட்கப்பட்டன” என்றார் ஜெயா ஜெடல்லி.

“பெரும்பாலான இளம் பெண்கள் திருமண வயது 22-23 ஆக இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர். சிலர் எதிர்ப்புகளையும் வெளிப்படுத்திருந்தனர். ஆனால், இலக்குள்ளான பிரிவுக்கு உதவ வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.” என்றும் அவர் கூறினார்.

இந்த நிபுணர் குழு அதன் பரிந்துரையில், மக்களிடையே முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் மக்கள் இதை முழுமனதுடன் ஏற்பார்கள் என்றும் கூறியுள்ளது. பள்ளிப் பாடத்தில் கலவி குறித்த பாடங்கள் இடம் பெற வேண்டும் என்றும் இது முறைப்படுத்தப்படவேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது. பாலிடெக்னிகளில் பெண்களுக்கு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழில் முனைவோராக தேவையான பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும். பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும் இக்குழு பரிந்துரைத்துள்ளது. இவை மூலம் பெண்களின் திருமண வயது தள்ளிப் போக வாய்ப்புள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பெண்கள் பொருளாதார அளவில் வசதியாக இருந்தால், பெற்றோர்கள் 18 வயதுக்கு முன்னதாக திருமணம் செய்வது குறித்து பல முறை யோசிப்பார்கள்” என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்து திருமண சட்டம் பிரிவு 5 (iii)ன் படி பெண்களுக்கு 18ம் ஆண்களுக்கு 21 வயதிலும் திருமண வயதாக கூறப்பட்டுள்ளது.

நிபுணர் குழு அமைக்கப்பட்ட குறித்து 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுகையில், “ பெண்களின் திருமண வயது 1978ம் ஆண்டு 15ல் இருந்து 18 ஆக சாரதா சட்டம் 1929ல் திருத்தம் கொண்டு வரப்பட்டு உயர்த்தப்பட்டது என்று கூறினார். நாடு முன்னேறி வரும் நிலையில் பெண்களுக்கான உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் பெருகி வருகின்றன. பெண்களின் இறப்பு விகிதத்தை குறைக்கவும், ஊட்டச் சத்து குறைபாடுகளை களையவும் பெண்களுக்கான திருமண வயது உயர்த்தப்பட வேண்டும் என்பதை குழு வலியுறுத்தி உள்ளது. இந்த அடிப்படையில்தான் இளம் பெண்கள் கருத்தரிக்கும் நிலையை நாம் பார்க்க வேண்டும் என்ற அதன் நோக்கத்தில் தவறு காண முடியாது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment