பட்ஜெட் கூட்டத் தொடர்-குடியரசுத் தலைவர் இன்று உரை! நாளை மக்களவை, மாநிலங்களவை எப்போது கூடும்?
இந்திய மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிற 2022-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாளைய தினம் தொடங்குகிறது. இந்த ஆண்டு பல்வேறு துறையினர் பட்ஜெட் தாக்கலை எதிர்நோக்கி காத்துக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் நாளை நடக்க உள்ள பட்ஜெட் கூட்டத் தொடருக்காக குடியரசு தலைவர் இன்று உரை நிகழ்த்தவுள்ளார். 2022-2023 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது.
கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தவுள்ளார். நாளை 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்த முறை காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில் கடந்த ஆண்டு பயன்படுத்தப்பட்ட டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறுகிறது.
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கொரோனா பரவலின் சூழல் காரணமாக மாநிலங்களவை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே செயல்படும் என்று தகவல் கிடைத்துள்ளது.
அதே நிலையில் மக்களவை மாலை 4 மணி தொடங்கி இரவு 9 மணி வரையிலும் செயல்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
