போக்குவரத்து விதிமீறல்; பிரதமருக்கு அபராதம் விதித்த காவல்துறை!

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஓடும் காரில் சீட் பெல்ட் அணியாமல் வீடியோ வெளியிட்ட நிலையில், அவருக்கு அந்நாட்டு காவல்துறை அபராதம் விதித்துள்ளது.

கடந்த வியாழன் கிழமை அன்று, வடமேற்கு இங்கிலாந்தில் காரில் சென்று கொண்டிருந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், தனது சீட் பெல்ட்டை நீக்கிவிட்டு வீடியோ ஒன்றினை பதிவு செய்துள்ளார். நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக தனது அரசாங்கத்தின் புதிய “லெவலிங் அப் ஃபண்ட்” அறிவிப்புகளை விளம்பரப்படுத்துவதற்காக, ஓடிக்கொண்டிருக்கும் காரின் பின் இருக்கையில் அமர்ந்து சுனக் வீடியோவைப் பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோ சோசியல் மீடியாவில் பதிவிட்ட போது, அவரது காரை போலீஸ் வாகனம் கடந்து செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தன. சோசியல் மீடியாவில் பகிரப்பட்ட அந்த வீடியோவில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஷீட் பெல்ட் அணியாததை லங்காஷயர் போலீஸ் கவனித்துள்ளனர். இதனையடுத்து அவருக்கு 100 பவுண்ட்கள் அதாவது, இந்திய மதிப்பில் 10,032 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

இதுகுறித்து லங்காஷயர் போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லங்காஷயரில் ஓடும் காரில் பயணி ஒருவர் சீட் பெல்ட் அணியத் தவறியதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, இன்று (வெள்ளிக்கிழமை, ஜனவரி 20) லண்டனைச் சேர்ந்த 42 வயது நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” எனக்குறிப்பிட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் சாலைகளில் ஏற்பட்ட கார் விபத்துகளில் இறந்தவர்களில் சுமார் 30 சதவீதம் பேர் சீட்பெல்ட் அணியாதது தான் காரணம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இங்கிலாந்தைப் பொறுத்தவரை சீட் பெல்ட் அணியாத ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிப்பது, விதிகளை கடுமையாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்நாட்டின் பிரதமரே சீட் பெல்ட் அணியாமல் பயணித்தது சர்ச்சையைக் கிளப்பியது. இதுகுறித்து பிரதமரின் செய்தித் தொடர்பாளர் அளித்துள்ள விளக்கத்தில், “இது சிறிய கவனக்குறைவால் ஏற்பட்ட பிழை. சிறிய வீடியோவை படம் பிடிப்பதற்காகவே பிரதமர் தனது சீட் பெல்ட்டைக் கழற்றினார். இது தவறு என்று அவர் முழுமையாக ஏற்றுக்கொண்டு அதற்காக மன்னிப்புக் கேட்கிறார்” என அறிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.