#Breaking 60 பேர் மருத்துவமனையில் அனுமதி; இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் அதிரடி திருப்பம்!

இடைநிலை ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை தோல்வியுற்றதாகவும், போராட்டம் தொடரும் எனவும் போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சென்னை தலைமை செயலகத்தில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷாவுடன் போராட்டக்குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ராபர்ட், அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மூன்று நாட்களாக உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருவதாகவும், இதுவரை 60ம் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாகவும் கூறினார்.

சுமார் அரை மணி நேரம் நடைப்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகவும், நாளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு கூறுவதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கூறியதால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.

இடைநிலை ஆசிரியர்கள் குறைவான ஊதியம் பெறுவது 2009ம் ஆண்டு ஜூன் பிறகு தான் என்றும், ஊதிய முரண்பாடு சரி செய்ய வேண்டும் என்பதே கோரிக்கை எனவும், தூய்மை பணியாளர்களுக்கு நிகரான ஊதியம் வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கூறினார்.

அதேபோல், 13 ஆண்டுகளாக குறைவான ஊதியத்தை பெற்று வருவதாக கூறிய அவர், இனி இந்த நிலை தொடரக்கூடாது என்றும், ஊதிய முரண்பாடுகளை களையும் வரை போராட்டம் தொடரும் எனவும் உறுதிப்பட கூறினார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.