வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.
கடந்த வாரம் மத்திய பட்ஜெட் நிறைவடைந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வட்டி விகிதம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக 6வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ரெப்போ வட்டி உயர்வு காரணமாக தனிநபர், வீடு, வாகனம் போன்ற கடன்களுக்கான வட்டி விகிதம் கணிசமான அளவு மீண்டும் உயரவுள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பணவீக்கம், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
4% ஆக இருந்த ரெப்போ வட்டி விகிதம் மே 2022-இல் 4.40 % ஆக உயர்த்தப்பட்டது; பின்னர் ஜூன் மாதம் 4.90% ஆகவும், ஆகஸ்டில் 5.40% ஆகவும், செப்டம்பர் 30-ஆம் தேதி 5.9% ஆகவும் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் ஓராண்டுக்குள் 2.5 சதவீதம் வரை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.