#Breaking சர்ச்சை மருத்துவர் ஷர்மிகாவுக்கு நோட்டீஸ்; 15 நாட்களுக்குள் பதிலளிக்க கெடு!

யூடியூப் பேட்டிகள் மூலமாக சர்ச்சையில் சிக்கியுள்ள சித்த மருத்துவர் ஷர்மிகாவிற்கு தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சித்த மருத்துவரான ஷர்மிகா தனது சொந்த யூடியூப் சேனல் மற்றும் பிற யூடியூப் சேனல்களில் அழகு மற்றும் குழந்தை பிறப்பு தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பெண்களின் உடல் எடையைக் கூட்டுவது, குறைப்பது தொடர்பாகவும், குழந்தை பேறு தொடர்பாகவும் தவறான, அறிவியல் பூர்வமான ஆதாரங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்ததாக புகார்கள் எழுந்து வந்தன.

“இந்தியர்கள் மனிதர்களை விட பெரிய விலங்குகளான மாடு போன்றவற்றை சாப்பிட்டால் செரிமானம் ஆகாது” “கண்ட கண்ட உணவுகளை சாப்பிட்டால் டெங்கு, மலேரியா வரும், குலோப் ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ எடை அதிகரிக்கும்” என்றெல்லாம் சொல்லி பலரது விமர்சனத்திற்கும் ஆளானார்.

“சித்த மருத்துவத்தில் மாட்டுக்கறி பற்றி இல்லை என்றும் மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்று குறிப்பிடவில்லை, இதுபோன்ற போலியான தகவல்களை மருத்துவ அறிவுரைகள் என்ற பெயரில் பரப்பி வரும் ஷர்மிகா மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறையின் இணை இயக்குனர் டாக்டர் பார்த்திபன் கூறியிருந்தார்.

இந்நிலையில் “குலோப் ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ எடை அதிகரிக்கும் என்று சொன்னது ஒரு ஃபுளோவில் வந்த வார்த்தைதான்… அது தப்புதான்” என ஷர்மிகாவே வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கோரியிருந்தார். இருப்பினும் இயற்கையில் ஒருவர் செய்த தீமையைப் பொறுத்து அவர்களுக்கு குழந்தை பிறக்காது என பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதுதொடர்பாக புகார்கள் குவிந்த நிலையில், சித்த மருத்துவர் ஷர்மிகாவிற்கு தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மருத்துவர் ஷர்மிகா 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.