#BREAKING உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் காலமானார்!

உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவ் 82 வயதில்  உடல் நலக்குறைபாடு காரணமாக காலமானார்.

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரான 82 வயதான முலாயம் சிங் யாதவ் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி, குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே, முலாயம் சிங்கின் உடல்நிலை மோசமானதையடுத்து, அவசர சிகிச்சை பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார். இருப்பினும், அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின.

இதனிடையே, முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது தந்தையின் உடல் நிலை குறித்து விசாரித்ததாகவும் செய்திகள் வெளியாகின. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் முலாய் சிங்கின் உடல் நிலை குறித்து தொடர்ந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டு வந்த முலாயம் சிங் யாதவ், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

உ.பி. மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்துள்ள முலாயம் சிங் யாதவ், மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். 1989 டிசம்பர் 5ம் தேதி முதல் 1991 ஜூன் 24 வரையிலும் முதல் முறையாகவும், 1993 டிசம்பர் 4 முதல் 1995 ஜூன் 3 வரையிலும் இரண்டாவது முறையாகவும் முதல்வராக பதவி வகித்துள்ளார். இறுதியாக 2003ம் முதல் 2007 வரையில் உத்தரப்பிரதேச முதல்வராக முலாயம் சிங் யாதவ் பதவி வகித்துள்ளார். நேதாஜி என உத்தரப்பிரதேச மக்களால் புகழப்பட்ட முலாயம் சிங் யாதவ், மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

2012-ல் உ.பி.யில் சமாஜ்வாதி பெருவாரியான வெற்றி பெற்றபோது மகன் அகிலேஷ் யாதவை, முதல்வராக பதவியில் உட்கார வைத்தார். வயது முதிர்வு காரணமாக கட்சிப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்த முலாயம் சிங், 2019 மக்களவைத் தேர்தலில் மைன்புரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment