#Breaking நெருங்கி வரும் ஆபத்து; தமிழகம், ஆந்திராவிற்கு ரெட் அலர்ட்!

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திராவிற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் சென்னையில் இருந்து தென் கிழக்கில் சுமார் 550 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு- தென்கிழக்கில் சுமார் 460 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த புயலானது நாளை தொடந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும், நாளை இரவு புதுச்சேரி – ஸ்ரீஹரிக்கோட்டா இடையே கரையைக் கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த மாண்டஸ் புயல் தற்போது 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கும், ஆந்திர மாநிலத்திற்கும் ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் காரணமாக டிசம்பர் 8,9,10 தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 8ம் தேதி டெல்டா மற்றும் கடலூரில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேபோல் காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, வேலூர், கடலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழையும், தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 10ம் தேதி அன்று சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு ஆகிய இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.