கனமழை காரணமாக தஞ்சை மற்றும் புதுக்கோட்டையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நேற்று தென்மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இதன் காரணமாக இன்று தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது, இந்நிலையில் அதிகாலை முதலே தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
அதிகாலை முதலே கனமழை பெய்து வருவதால் தஞ்சை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதேபோல் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.