கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நேற்று தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, இன்று (07.12.2022) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது.
இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 08-09-ம் தேதிகளில் வடதமிழகம்-புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது சென்னைக்கு தென் கிழக்கே 700 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள, இந்த புயலானது நாளை மாமல்லபுரம் – பழவேற்காடு கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை (டிச.08) ஒரு நாள் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.