#Breaking கனமழை எதிரொலி; இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு குறைந்து தெற்கு நோக்கி நகர்ந்துள்ளதாகவும், அது, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. மேலும், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று இரவு முதல் மழை இல்லாவிட்டாலும் கன மழையை எதிர்பார்ப்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல் மழையின் காரணமாக நாகை மாவட்டத்தில் 1 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து நாகை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஏற்கனவே கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரைக்கால், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.