நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து புயலாக வலுப்பெற்றுள்ளது. நேற்று இரவு 11.30 மணி நிலவரப்படி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தற்போது காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே 560 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 640 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ள மாண்டோஸ் புயலானது, நாளை நள்ளிரவு தெற்கு ஆந்திரா கடற்கரையில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே கரையைக் கடக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனிடையே வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மாண்டஸ் புயல் சின்னம் காரணமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கடல் பகுதி கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
கடல் சீற்றம் காரணமாக விழுப்புரம் மாவட்டம் மீனவர்கள் இரண்டாவது நாளாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை இதனால் மரக்காணம் மற்றும் 19 மீனவ கிராமங்கள் மீனவர்கள் தங்கள் 1500 க்கும் மேற்பட்ட படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் பாதுகாப்பாக மேடான பகுதிக்கு நிறுத்தி வைத்துள்ளனர்.