#Breaking ஓபிஎஸ் முக்கிய ஆதரவாளரை தட்டித்தூக்கிய திமுக; கோவை மண்டலத்தில் கொடி நாட்ட திட்டம்!

திமுக அரசு கோவையில் தனது பலத்தை அதிகரிக்கும் விதமாக பிற கட்சியின் முக்கிய நிர்வாகிகளை கொக்கிப்போட்டு தூக்கி வருகிறது. தற்போது அந்த வரிசையில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து சமீபத்தில் அவரிடம் இருந்து விலகிய கோவை செல்வராஜ் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொங்கு மண்டலத்தை திமுகவின் கோட்டையாக மாற்றும் பொறுப்பு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அசைன்மெண்டின் ஒரு பகுதியாக தான் கடந்த ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகியாகவும், கோவையின் முக்கிய பிரமுகராகவும் வலம் வந்த மகேந்திரன், ஆயிரக்கணக்கான மநீம தொண்டர்களுடன் திமுகவில் இணைந்தார்.

அதிமுக மற்றும் பாஜகவிற்கு அடுத்த படியாகவே கோவையில் திமுகவிற்கு வரவேற்பு உள்ளது. நடந்து முடித்த சட்டமன்ற தேர்தலில் கூட கோவை மண்டலத்தில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் அமோகமாக வெற்றி பெற்றனர். மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், அமுல்கந்தசாமி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இதனால் திமுக அரசு கோவையை புறக்கணிப்பதாக அதிமுக மற்றும் பாஜக தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறது. இந்நிலையில் கொங்கு மண்டலத்தை தனது கோட்டையாக மாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ள திமுக, கோவையில் செல்வாக்கு உள்ள அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை தட்டித்தூக்கி வருகிறது.

அந்த வரிசையில் இரு தினங்களுக்கு முன்பு ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய கோவை செல்வராஜ், நாளை திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை காலை 10:30 மணி அளவில், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளாராம்.

கடந்த 4ம் தேதி அன்று, அதிமுகவில் இருந்து விலகி இருக்க உள்ளதாக அறிவித்த கோவை செல்வராஜ், திராவிட பாரம்பரியத்தை விட்டு விலக மாட்டேன் என்றும், விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்றும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அதிமுகவில் இருந்து விலகிய கோவை செல்வராஜை கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.