மாதுரி தீட்சத் நடித்த முதலும் கடைசியுமாக நடித்த ஒரே தமிழ்ப்படம்.. பாதியிலேயே பெட்டிக்குள் சுருண்ட சம்பவம்

தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட்டுக்குப் போய் சாதித்த நடிகைகள் பலர் உண்டு. வைஜெயந்தி மாலா, ஹேமமாலினி, ஸ்ரீ தேவி, அசின், கங்கனாராவத் போன்ற நடிகைகள் தமிழில் நடித்த பின்னரே இந்தி சினிமாபக்கம் சென்று அங்கு கால் பதித்தனர். இப்படி வந்தாரை வரவேற்று பெரும்புகழை அவர்களுக்கு ஈட்டித் தந்தது பாலிவுட் சினிமா. ஆனால் பாலிவுட்டில் இருந்து வந்த புகழ்பெற்ற நடிகை ஒருவர் தான் நடித்த ஒரே படம் அதுவும் வெளியாகாமல் போன சம்பவம் நடந்துள்ளது.

அந்த நடிகைதான் பாலிவுட் கனவுக் கன்னியாகத் திகழ்ந்த மாதுரி தீட்சத். 1990 மற்றும் 2000 ஆண்டுகளின் இடைப்பட்ட காலங்களில் இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற நடிகையாகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதலிடத்திலும் இருந்தார். பல புகழ்பெற்ற திரைப்படங்களில் நடித்த மாதுரி போர்பஸ் இதழின் உலகின் சக்தி வாய்ந்த பிரபலங்கள் பட்டியலிலும் இடம்பிடித்தார்.

இவரை தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய காந்தி கிருஷ்ணா என்ற இயக்குர். அந்தப் படம் தான் என்ஜினியர் என்ற திரைப்படம். தமிழில் லிங்கா என்ற படத்தின் மூலம் முல்லைப் பெரியாறு அணை வரலாற்றைக் காட்டியது போல் குஜராத்தின் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணை கட்டிய வரலாற்றினை மையப்படுத்தி என்ஜினியர் என்ற படம் உருவானது.

இதில் பொறியாளராக நடித்தவர் அர்விந்த் சாமி. ஒரு சிறிய கிராமப் பகுதியில் அணை கட்ட முயற்சிகள் மேற்கொள்ளும் போது அந்த கிராமமே அழியும் சூழ்நிலை ஏற்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் தூண்டுதலால் அணையைக் கட்ட முழு முனைப்புடன் செயல்படுகிறார் பொறியாளர் அர்விந்த்சாமி. ஆனால் கிராமத்து மக்களின் உணர்வுகளைப் புரிந்து அவர்களுக்காக குரல் கொடுப்பவராக அர்விந்த்சாமியின் மனைவியாக மாதுரி தீட்சத்.

சும்மா போட்ட தாளத்தையே சூப்பர் ஹிட் பாடலாக மாற்றிய ஸ்ரீகாந்த் தேவா.. குத்துப்பாட்டுன்னா இதான்..

இந்தப் படத்திற்கு ஜீவா ஒளிப்பதிவு செய்தார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தார். 80% படப்பிடிப்பு முடிந்த நிலையில் நிதி பற்றாக்குறையால் படம் அப்படியே நின்றது. இயக்குநர் ஷங்கரும், தாணுவும் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அப்படம் அப்படியே முடங்கிப் போனது. மாதுரி தீட்சத் தமிழில் முதலும், கடைசியுமாக நடித்த படமாக என்ஜினியர் விளங்கியது. ஆனால் படம் வெளிவரவில்லை.

அதன்பின் காந்தி கிருஷ்ணா செல்லமே படத்தினை எடுத்து வெற்றியைக் கொடுத்தார். இதற்கு அவருக்கு உறுதுணையாக இருந்தவர் எழுத்தாளர் சுஜாதா. செல்லமே படத்தில் விஷாலை அறிமுகப்படுத்தினார். மேலும் ஆனந்த தாண்டவம், நிலாச் சோறு போன்ற படங்களையும் காந்தி கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews