திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடப்போகிறேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சும்மா போக்கு காட்டி வருகிறார்… அவரிடம் அப்படியெல்லாம் எந்த ஒரு ஆதாரமும் கிடையாது என சோசியல் மீடியாவில் விவாதங்கள் வெடித்து வந்த நிலையில், அறிவாலயத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் ஊழல் செய்த 10 திமுகவினர் பற்றிய விவரங்களை நாளை ஆதாரத்துடன் வெளியிட உள்ளதாக அண்ணாமலை அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணாமலைக்கும், செந்தில் பாலாஜிக்கும் இடையே வெடித்த வாட்ச் பஞ்சாயத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. ரஃபேல் கடிகாரத்தின் ரசீது எங்கே? என செந்தில் பாலாஜி கொளுத்திப்போட, “நான் என்னோட ஒட்டுமொத்த சொத்துப்பட்டியலையே வெளியிட தயாராக இருக்கிறேன், தில் இருந்தா திமுக அமைச்சர்களும் அதேமாதிரி செய்வீங்களா?” என திமுக அமைச்சர்களுக்கு அண்ணாமலை சவால் விட்டிருந்தார்.
மேலும் தனது வருவாய்க்கு அதிகமாக ஒரு பைசா சொத்து சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும், தனது சொத்துக்கள் முழுவதையும் அரசிடம் ஒப்படைக்க தயார் என்றும் கூறியிருந்தார். இருப்பினும் அடுத்தடுத்து செந்தில் பாலாஜி கொடுத்த அழுத்தம் தாங்காமல் வெடித்தெழுந்த அண்ணாமலை, திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை விரைவில் வெளியிடுவேன் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
அன்று முதலே அண்ணாமலை என்ன செய்யப்போகிறார்… யாருடைய ஊழல் முகத்திரையை கிழித்தெறியப்போகிறார் என அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு கிளம்பி வந்தது. இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக தொடர்பாகப் பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் திமுக ஊழல் அமைச்சர்களின் பட்டியலை தமிழ்புத்தாண்டு தினமான நாளை காலை 10.15 மணிக்கு வெளியிடுவேன் என அண்ணாமலை அறிவித்துள்ளார். அத்துடன் திமுக முக்கிய புள்ளிகள் ஊழல் செய்துள்ளதற்கான ஆதாரங்கள் அடங்கிய பென் டிரைவ் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவர் வெளியிட்டுள்ள ஊழல் பட்டியல் தொடர்பான வீடியோவில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மருமகன் சபரீசன், அமைச்சர் உதயநிதி, எம்.பி கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட முதலமைச்சரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சரியாக 9.37 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த ஊழல் பட்டியல் புரோமோவானது வெறும் 3 மணி நேரத்திலேயே 3 லட்சத்து 26 ஆயிரம் பார்வையாளர்களைக் கடந்து பல்லாயிரக்கணக்கானோரால் வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் அண்ணாமலை வெளியிட உள்ள ஊழல் பட்டியல் மீதான எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தையும் கடந்து மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உறுதியாகியுள்ளது.
குறிப்பாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்களை குறிவைத்து பட்டியல் வெளியாகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் கிளப்பியுள்ளது.