இபிஎஸ், ஓபிஎஸ் உடன் திடீர் சந்திப்பு ஏன்?- பாஜக நிர்வாகி சி.டி. ரவி விளக்கம்!

இபிஎஸ், ஓபிஎஸை இணைப்பது தொடர்பாக பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டதாக பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் கே.எஸ். தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் சார்பில் செந்தில் முருகனும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இருதரப்பினரும் வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் இரட்டை இலை சின்னம் முடங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் அதிமுக உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டி வரும் நிலையில், இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை சந்தித்து பேசியதைத் தொடர்ந்து, இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்யவிருந்த எடப்பாடி தரப்பு வேட்பாளர் வேறு தேதிக்கு வேட்புமனு தாக்கல் செய்வார் என்ற தகவல்கள் வெளியாகின.

ஏற்கனவே பாஜக வேட்பாளரை அறிவித்தால் வாபஸ் பெற தயார் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கூறியுள்ள நிலையில், விரைவில் பாஜக தனது வேட்பாளரை அறிவிக்கும் என்றும், அதற்காகவே இருதரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் தியாகராய நகரில் உள்ள கமலாயத்தில் பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் அண்ணாமலை ஆகியோர் கூட்டாக  செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர், திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வலிமையான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும், தனித்தனியாக வேட்பாளரை நிறுத்தாமல் ஒற்றை வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.

பாஜக நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பிப்ரவரி 7ம் தேதி வரை அவகாசம் இருப்பதாக தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மீண்டும் இணைவது தொடர்பாக பாஜக சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.