தனியார் வங்கியில் கடன் வாங்கி இஎம்ஐ மூலம் வண்டி வாங்குறீங்களா.. இப்படியும் ஏமாற்றப்படலாம்?

கடலூர்: கடலூரில் இம்பீரியல் சாலையில் செயல்படும் தனியார் வங்கி ஒன்றில் கடன் வாங்கி இஎம்ஐ மூலம் வண்டி வாங்கிய நபர், கடன் தொகையை சரியாக கட்டிய போதிலும், கடன் ஏஜெண்ட் செய்த மோசடியால் இப்போது போலீஸ் , வங்கி என்று அலைந்து வருகிறார்.

கடலூர் வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் கடலூரில் இம்பீரியல் சாலையில் செயல்படும் தனியார் வங்கியில் இருசக்கர வாகனம் வாங்குவதற்காக வாகன கடன் வாங்கி இருக்கிறார். இவர் கடன் தொகையை முறையாக செலுத்தி வந்துள்ளார்.இந்நிலையில் மூன்று மாதங்களாக வண்டிக்கான தவணையை வங்கியில் சர்வர் பிரச்சனை எனக்கூறி கலெக்சன் ஏஜெட் மணிவண்ணன் ஜி பேயில் வாங்கி உள்ளார்

வாகன கடன் இஎம்ஐக்கு பணம் கட்டியதற்கான ரசீதினை கேட்ட போது மணிவண்ணன் தரவில்லை. பணம் கட்டியதற்கான ரசீது சர்வர் பிரச்சனை காரணமாக வரவில்லை என்று ஏஜெண்ட் கூறியிருக்கிறார்.

இப்படியே 3மாதங்களாக சர்வர் பிரச்சனை என்று கூகுள் பே வழியாக செலுத்திய நந்தகுமார் 3 மாத தவணையை செலுத்தவில்லை என்று கூறி, வங்கி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தகுமார், தான் பணம் செலுத்தியதற்கான ஆதாரத்துடன் வங்கிக்கு சென்று பேசியுள்ளார். நந்தகுமார், தனியார் வங்கியின் கலெக்சன் ஏஜெண்ட் ஜிபேயில் அனுப்பிய ரசீது மற்றும் அவர் பேசிய ஆடியோ ஆகியவற்றை காட்டிய போதும் வங்கி நிர்வாகம் ஏற்கவில்லை. அங்கு போய் பாருங்கள்.. இங்கு போய் பாருங்கள் என்று அலைய விட்டார்களாம்.

ஒரு கட்டத்தில் வங்கி நிர்வாகம், ஏஜெண்டிடம் செலுத்திய பணத்துக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. 3 மாத தவணையை அபராதத்துடன் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். அத்துடன், மணிவண்ண ஏமாற்றி சென்றதற்கு தாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது என்று வங்கி நிர்வாகம் கைவிரித்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த நந்தகுமார். தனது உறவினர்களிடம் வங்கிக்கு வந்து அதிகாரிகளிடம் இதுபற்றி கேள்வி கேட்டுள்ளார். அதற்கு வங்கி நிர்வாக அதிகாரிகள், சென்னைக்கு சென்று தலைமை அலுவலகத்தில் புகார் அளிக்குமாறு கூறியிருக்கிறார்கள். இதனால் வெறுத்துப்போன வாடிக்கையாளர் நந்தகுமார், வங்கியின் ஷட்டரை இழுத்து போட்டு பூட்டி, வங்கிக்குள் ஊழியர்களை அடைத்து சிறை வைத்தார். ங

இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார், நந்தகுமாரிடம் சமாதானம் செய்து, வங்கியை திறந்து ஊழியர்களை பத்திரமாக மீட்டுள்ளார்கள். வங்கியின் அதிகாரப்பூர்வ ஏஜெண்டான மணிவண்ணன் நந்தகுமாரை ஏமாற்றி பணத்தை ஏமாற்றி சென்றதற்கு நீங்கள் தான் பொறுப்பு என்று கூறிய போலீசார், வங்கி அதிகாரிகள் இந்த விவாகரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews