ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் வங்கி கணக்கு வைத்து இருப்பது அவசியம் என்ற திடீர் நிபந்தனையால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக அரசு மற்றும் மத்திய அரசு அவ்வப்போது திடீர் திடீரென புதிய நிபந்தனைகளை விதித்து வருவது மக்களுக்கு பெயர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது வங்கி கணக்கு இல்லாத ரேஷன் அட்டைதாரர்கள் மத்திய கூட்டுறவு வங்கியில் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என நிபந்தனை விதித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் வங்கி கணக்கு இல்லாமல் இருப்பதாகவும் அவர்கள் உடனடியாக அருகில் உள்ள கூட்டுறவு வங்கியில் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் வங்கி கணக்கு வைத்திருந்தாலும் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு இல்லை என்ற டேட்டா தெரிவிப்பதாகவும் எனவே வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் உடனடியாக அந்த கணக்குடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டைதாரர்கள் ஏற்கனவே வங்கி கணக்கு வைத்திருந்தால் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் கணக்கு இல்லாதவர்கள் உடனடியாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் தொடங்கப்படும் வங்கி கணக்கிற்கு ஜீரோ பேலன்ஸ் வசதி செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவை உடனடியாக பின்பற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் வங்கி கணக்கு இல்லாதவர்களின் விவரங்களை உடனடியாக தொகுத்து வழங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .
ஏற்கனவே வங்கி கணக்கு எண் வைத்து இருந்தால் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை பணியாளர்கள் அவர்களது ரேஷன் அட்டைதாரர்கள் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வங்கி கணக்கு எண், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் நகல் ஆகியவற்றை வழங்கும்படி அறிவுறுத்த வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.