வளர்ந்து வரும் நவீன காலகட்டத்திற்கு ஏற்ப பிளாஸ்டிக் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவது மட்டுமல்லாமல் மனிதர்களுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
இதனை கருத்தில் கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதாக அரசு தெரிவித்திருந்தது. இந்த சூழலில் பிளாஸ்டிக் பயன்பாடு என்பது கடல் பகுதிகளையும் ஆக்கிரமித்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, சென்னை மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.
இதனை தொடர்ந்து 3 கடற்கரைகளிலும் காலை, மாலை என இருவேளை ஆய்வு செய்து அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், பிளாஸ்டிக் இல்லா கடற்கரைகளாக பாரமரிக்கும் வகையில் மூன்று கடற்கரைகளிலும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிப்பதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.