ரஜினி, கமல் படங்களில் கிடைத்த வாய்ப்பு.. இயக்குனர் பாலச்சந்தரே பாராட்டிய பிரபல நடிகை.. இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்க..

இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்து கலக்கியவர் கே எஸ் ஜெயலட்சுமி. 1976 ஆம் ஆண்டு ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். ஆனால் அதன் பிறகு அவர் கிடைத்த வேடங்களில் நடிக்க தொடங்கினார் என்பதும் குறிப்பாக பிரதாப் போத்தன் நடிப்பில் பாலு மகேந்திரா இயக்கத்தில் உருவான ’மூடுபனி’ என்ற திரைப்படத்தில் விலைமாது வேடத்தில் கலக்கி இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து பாலச்சந்தரின் விருப்பத்திற்குரிய நடிகையாக மாறினார். அவரது இயக்கத்தில் உருவான அக்னிசாட்சி, பொய்க்கால் குதிரை, புன்னகை மன்னன், மனதில் உறுதி வேண்டும், புதுப்புது அர்த்தங்கள், ஒரு வீடு இரு வாசல் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பெரும்பாலும் அவர் காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்த ஜெயலட்சுமிக்கு பாலச்சந்தரின் பாராட்டுக்களும் அதிகம் கிடைத்திருந்தது.

பாலச்சந்தர் படங்கள் மட்டுமின்றி மற்ற சில பிரபலங்களின் படங்களிலும் நடித்தார். கமல்ஹாசனுடன் புன்னகை மன்னன், ரஜினியுடன் குரு சிஷ்யன், விஜயகாந்த் உடன் புலன் விசாரணை, மம்மூட்டியுடன் அழகன், சரத்குமாருடன் ஊர் மரியாதை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த ஜெயலட்சுமி, கடைசியாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான ’சரவணன் இருக்க பயமேன்’ என்ற திரைப்படத்தில் நடித்தார்.

மேலும் சின்னத்திரையிலும் தனது நடிப்பு முத்திரையை கே.எஸ்.ஜெயலட்சுமி பதித்துள்ளார். கே பாலசந்தர் இயக்கத்தில் உருவான காசளவு நேசம் என்ற தொடரில் மாதவிதேவி என்ற கேரக்டரில் நடித்த கே.எஸ்.ஜெயலட்சுமி, அதன் பின்னர் சித்தி, அலைகள், அண்ணாமலை உள்ளிட்ட பல சன் டிவி தொடர்களிலும் ராஜ் டிவி, ஜெயா டிவி, ஜீ தமிழ் தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பேரன்பு என்ற தொடரில் நடித்து வருகிறார் என்பதும் இந்த சீரியலில் அவர் பாட்டி இடத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரையுலகம், சின்னத்திரை உலகம் என இரண்டிலுமே தனது நடிப்பு முத்திரையை பதித்துக் கொண்டிருக்கும் கே.எஸ். ஜெயலட்சுமி இன்னும் ஏராளமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி காலம் கடந்து அவரது கதாபாத்திரங்கள் நிற்க வேண்டும் என்பதே பலரின் ஆசை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews