பக்தி யோகத்தின் முக்கிய அம்சமே இதுதான்…! மரணமில்லாப் பெருவாழ்வை அடையும் வழி….!!

அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது. அதிலும் அரிது எதுவென்றால் கூன், குருடு, செவிடு, பேடு நீங்கி பிறத்தல் அரிது. அதிலும் அரிது உள்ளது. அது எது என்றால் ஞானமும் கல்வியும் அந்தப் பிறவிக்கு வாய்ப்பது அதிலும் அரிது உண்டு.

அது எது தெரியுமா? அது தான் ஞானமும், கல்வியும் வாய்ப்பது. அதிலும் அரிது இருக்கவே இருக்கு. அது என்னன்னா தான் தானமும், தவமும் செய்வது. வானவராகிய கடவுளை நாடினால் இதற்கான வழி பிறந்திடும் என பாடி முடித்திருப்பார் அவ்வையார்.

விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்வர். பொதுவாக ஊழ் அல்லது கர்மவினையையே விதி குறிக்கிறது. அப்படின்னா, எப்படிக் கர்மவினையை அறிவால், அதாவது ஞானத்தால் மெய்யறிவால் வெலவது? அதைப் பற்றி சிறு கதையுடன் பார்க்கலாம்.

மார்க்கண்டேயர் கதைதான் அது. பல காலம் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்த சிவனடியார்களான தம்பதியினருக்கு இறையருளால் மகனாகப் பிறந்தவர் தான் மார்க்கண்டேயர். குழந்தைப்பேறு அருளும்போது இறைவன் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கிறார்.

‘மந்தமாக நூறாண்டுகள் வாழும் குழந்தை வேண்டுமா, அல்லது சிறந்த அறிவாளியான குழந்தை வேண்டுமா? அறிவாளி குழந்தை என்றால் பதினாறே ஆண்டுகள் மட்டும் தான் வாழும் என்றும் ஒரு கண்டிஷன் போடுகிறார். தம்பதியினரோ பதினாறு ஆண்டுகள் மட்டுமே வாழக்கூடிய புத்திசாலிக் குழந்தையே போதும் என்றனர்.

தன்னுடைய பெற்றோரைப் போலவே மார்க்கண்டேயரும் சிறந்த சிவபக்தராக இருந்தார். அவரது ஆயுள் முடியும் நேரமும் வந்தது. பெற்றோர் கலங்கித் தவித்தனர். இறைவனது கருணையால் பிறந்த தவப்புதல்வன், இறைவனுடைய வரத்தின்படி இறப்பதை யார் தான் தாங்கிக் கொள்ள முடியும்? அவர்களால் அதை எப்படித் தடுக்க முடியும்? மார்க்கண்டேயர் அவர்களது கலக்கத்தைக் கண்டார்.

‘அஞ்சேல், இதுவே இறைவனின் தீர்வு எனில் நம்மால் ஆவது என்பது எதுவுமில்லை. எனவே, நாம் சிவபூஜை செய்து அவரைத் தொழுவோம். எது நிகழ்ந்தாலும் அவரது திருவுளப்படியே நிகழ்ந்தது என்று ஏற்றுக் கொள்வோம், என்று பெற்றோருக்கு ஆறுதல் கொடுத்து சிவபெருமானைத் தொழத் துவங்கினார்.

எந்தை ஈசன் அருளால் பிறந்த அருட்ச்செல்வர் என்பதால் மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்கத் தன் கணங்களை அனுப்பாமல், எம தர்மராஜனே நேரில் வந்தான். குறித்த நேரத்தில் பாசக் கயிற்றை அவர் மீது வீசினான். மார்க்கண்டேயர் தாவி எழுந்து தான் தொழுத சிவலிங்கத்தை இறுகத் தழுவிக் கொண்டார்.

Markandeyar 2
Markandeyar 2

பாசக் கயிறு அவரையும், அவர் தழுவிய ஈசனின் திருவுருவத்தையும் சேர்த்து இழுத்தது. அங்கு ஒரு பெரும் ஓங்கார ஒலி கேட்டது. நிலம் நடுங்கியது. வான் இருண்டது. உலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் அக்கணத்தில் தாங்கள் ஒரு கயிறால் கட்டுண்டது போல உணர்ந்தனர்.

லிங்கத்திலிருந்து பொன்னார் மேனியனான சிவபெருமான் பெரும் ஒளியுடன் தோன்றினார். பாசக் கயிற்றை வீசிய எமராஜனை எட்டி உதைத்தார். பரம பக்தனான மார்க்கண்டேயரின் தலையில் தன் திருக்கரத்தை வைத்து மார்க்கண்டேயா, உன் தூய்மையான பக்தியை மெச்சினோம்.

இனி உனக்கு மரணமே கிடையாது. இன்றிலிருந்து நீ மரணமில்லாப் பெருவாழ்வு வாழும் சிரஞ்சீவி ஆவாய் என்று அருளி மறைந்தார். அவரது பெற்றோர் அகமகிழ்ந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். அனைவரும் கருணைப் பெருங்கடலான ஈசனைப் பணிந்து வணங்கினர். அன்றிலிருந்து அவரை என்றும் பதினாறு வயது மார்க்கண்டேயர் என்று போற்றினர்.

சிரஞ்சீவித்துவம் அல்லது மரணமில்லாப் பெருவாழ்வு என்பதை, சாவே இல்லாமல் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்வது தன் கர்மவினையின் காரணமாகப் பல பிறவி எடுத்து வந்து, பின்னர் குருவருளால் முக்தி நோக்கி வழிகாட்டப்பட்டு, ஏதோ ஒரு பிறவியில் இறையருளால் அடைய வேண்டிய அப்பேரானந்தப் பெருநிலையை அடைவது தான்.

அதாவது பிறவி என்ற பெருங்கடலில் இருந்து நீந்தி விடுதலை அடைய மார்க்கண்டேயருக்கு ஈசன் அப்பிறவியிலேயே அளித்தருளினார். மார்க்கண்டேயர் அக்கணமே ஜீவன்முக்தர் ஆனார்.

Lord Shiva
Lord Shiva

அற்புதமான இப்புராண நிகழவே, ‘விதியை மதியால் வெல்லலாம்’ என்பதற்கும் சிறந்த உதாரணம். மார்க்கண்டேயரின் விதி, அதாவது கர்மவினைப் பயன், அவர் அப்பிறவியில் பதினாறு வயதிலேயே மரிப்பார் என்பது.

தன்னுடைய மரண காலம் வந்ததை அறிந்தபோதிலும் மார்க்கண்டேயர் கலங்கிப் புலம்பவில்லை. தெளிவாகச் சிந்தித்து, தன்னுடைய பிறப்பிற்கு காரணமான ஈசனே கதி என்று இறைவனிடம் முழுமையாகச் சரணாகதி அடைந்து விட்டார்.

இது நிச்சயமாக மரணத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டுச் செய்த செயல் அல்ல. ஆனால், ஆறாவது அறிவு என்று நாம் ஓயாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் புத்தியை, சரியான நேரத்தில், முறையாகப் பயன்படுத்திய செயலே.

சிவனடியாரான மார்க்கண்டேயர் மரணத்தை எதிர்கொள்ளத் தயாராகவே இருந்தார். ஏனெனில், அவரது புரிதலில், பதினாறு வயதில் மரணம் என்பது இறைவனின் திருவிளையாடல்களில் ஒன்று தான்.

எனவே, உடலின் மீதிருந்த பற்றை உதறிவிட்டு, மரணம் பற்றிய சிந்தனையை ஒதுக்கி விட்டு, அதாவது மனத்தின் பிடியிலிருந்து விடுபட்டு, நான் உடல் அல்ல, நான் மனமும் அல்ல, என்ற தெளிவுடன், முழுமையான விழிப்புணர்வோடு தன் இறுதிக் கணத்தை எதிர்கொண்டு, எல்லாம் வல்ல இறைவனையே தன்னுடைய கடைசி காலத்தில் சரணடைந்தார்.

பக்தி யோகத்தின் முக்கிய அம்சமான முழுமையான சரணாகதி என்பதன் பெருமையை உலகிற்கு உணர்த்துவதுதான் என்பதையே இப்புராணக்கதை நமக்கு விளக்குகிறது.

தனக்கு வழங்கப்பட்ட பெருங்கொடையான அறிவை, தக்க சமயத்தில், முறையாகப் பயன்படுத்திய மார்க்கண்டேயரது வாழ்க்கை நமக்கு ஒரு பாடம். இப்பிறவியிலேயே முக்தியை அடைவது என்பது அவரவர் சாமர்த்தியம்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.