இன்று ஆழ்வார்திருநகரியில் கருட சேவை… களைகட்டப்போகும் வைகாசி விசாகம்…!

தூத்துக்குடி மாவட்டம் நவதிருப்பதி தலங்களில் ஒன்றாக விளங்குவது ஆழ்வார் திருநகரி. நம்மாழ்வார் அவதரித்த இந்த தலம் மிகவும் சிறப்புவாய்ந்தது. இங்கு வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. அதெப்படி முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரம் தானே விசாகம்.

அதுவும் வைகாசி விசாகம் என்றாலே திருச்செந்தூர் அல்லவா களைகட்டும் என்று பலரும் நினைப்பதுண்டு. ஆம். அதே சமயம் ஆழ்வார்திருநகரியும் களைகட்டும். அங்கு ஏன் என்றால் நம்மாழ்வார் அவதரித்த நட்சத்திரமும் விசாகம் தான். இந்த விழாவின் சிறப்பைப் பற்றி இங்கு பார்ப்போம்.

வாகனங்களில் உயர்ந்தது கருடவாகனம். பெருமாளுடன் கருடன் ரொம்பவே தொடர்பு உடையது. அதனால் தான் கருடவாகனத்தில் பெருமாள் எழுந்தருள்கிறார்.

வைணவத்தில் ஆழ்வார் என்றாலே நம்மாழ்வார்தான். இருந்த இடத்தில் இருந்தபடியே இருக்க, எல்லா திவ்ய தேசப் பெருமாளும் அவரிடம் வந்து தமிழ் பாசுரங்களைப் பெற்றதாகச் சொல்வார்கள். அவர் ஒரு புளிய மரத்தடியில் யோக நிலையில் 16 ஆண்டு காலம் இருந்தார்.

Azhwar Thirunagari koil
Azhwar Thirunagari koil

வைணவத்தில் ஆழ்வார்கள் வரிசை நம்மாழ்வாரிடம் தொடங்கி திருமங்கை ஆழ்வாரிடம் முடியும். “பராங்குச பரகாலர்கள்” என்று இந்த வரிசையைக் கூறுவது உண்டு. இருவருக்கும் திருநகரியோடு தொடர்பு உண்டு. ஆழ்வார் அவதாரத்தலம் ஆழ்வார் திருநகரி.
திருமங்கை ஆழ்வாரின் அவதார உற்சவம் கொண்டாடப்படும் தலம் திருவாலி திருநகரி. ஆழ்வார் திருநகரி திருக்குருகூர் என்றும் வழங்கப்படும்.

கஜேந்திரன் என்ற யானை தினமும் தாமரை மலர்களைப் பறித்து எம்பெருமானுக்கு சாற்றி வழிபட்டு வந்தது. அதே போன்று ஒரு நாள் குளத்தில் மலர்களைப் பறிக்க வந்த போது முதலையின் வாயில் அகப்பட்டுக் கொண்டது. முதலையிடமிருந்து தப்பிக்க யானை பல ஆண்டுகளாகப் போராடியது. கடைசியில் முதலை யானையை நீருக்குள் இழுத்துச் சென்றது.

kajendra motcham
kajendra motcham

இனி தன்னால் எதுவும் முடியாது என்று உணர்ந்து கொண்ட கஜேந்திரன் எம்பெருமானிடம் தன் கையில் உள்ள மலரை எப்படியாவது சமர்ப்பிக்க வேண்டுமே என்று எண்ணி அழுதது. ஒரே நிலையில் ஆதிமூலமே என்று அழைத்தது. உடனே அடுத்த கணமே ஸ்ரீமன் நாராயணன் கருடன் மீது விரைவாக வந்து முதலையைக் கொன்று யானையை மீட்டார். அதன் கையில் இருந்த மலர்களையும் பெற்றுக் கொண்டார்.

இதுதான் கருடசேவை தோன்ற காரணமாயிற்று.
தாமிர பரணி கரையில் உள்ள திருத்தலம்.
இந்த தாமிரபரணி கரையை ஒட்டி வட கரையிலும், தென்கரையிலும் அடுத்தடுத்து அமைந்துள்ள திருத்தலங்களை ஒன்றாக நவதிருப்பதிகள் என்று அழைப்பர்.

ஆழ்வாரின் அவதார நட்சத்திரமானது வைகாசி விசாகம். இந்த வைகாசி விசாகத்துக்கு ஒப்பான ஒரு திருநாள் இல்லை என்றார் மணவாள மாமுனிகள்.

ஆழ்வார் திருநகரியில், ஆழ்வார் அவதாரம் செய்த வைகாசி விசாகத்தை ஒட்டி பிரம்மோற்சவமாக ஆழ்வார் திருநாள் நடைபெறுகிறது. அன்றைய நாளில் இந்த விழா மிகவும் விசேஷமாக நடைபெறுகிறது.
அந்த உற்சவம் கடந்த மாதம் 24 ஆம் தேதி துவங்கியது.

இதன் முதல் நிகழ்வாக 22 ஆம் தேதி திங்கட்கிழமை திருமுளைச் சாற்று உற்சவம் நடைபெற்றது. கூரத்தாழ்வான் சந்நதியில் இருந்து தேங்காய் வாங்கி, மாலையில் தேங்காய் சாற்றுதல் என்ற உற்சவம் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்தது.

இதற்கு அடுத்த நாள் மதுரகவியாழ்வார் உற்சவம். 24-ஆம் தேதி ஆழ்வார் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் வாகன சேவை உலா நடைபெறும். அதன்படி இன்று (28.5.2023) பிரசித்தி பெற்ற கருடசேவை நடக்கிறது.

இன்று காலை சுவாமி நம்மாழ்வார் பூப்பந்தல் மண்டபத்தில் எழுந்தருளுவார். நவதிருப்பதி எம்பெருமான்களுக்கு மதுரமான தமிழில் மங்களாசாசனம் நடைபெறும்.

இன்று இரவு மதுரகவி ஆழ்வார் முன்செல்ல, நம்மாழ்வார் அம்ச வாகனத்தில் எழுந்தருள, 9 எம்பெருமான்களும் கருட வாகனத்தில் ஆரோகணித்த கருட சேவை உற்சவம் மிகச்சிறப்பாக நடைபெறும்.

இந்த மங்களாசாசன உற்சவத்திற்காக ஆயிரக்கணக்கான அன்பர்கள் கூடியிருப்பார்கள். ததீயாராதனம், வைணவ மாநாடுகள், கருத்தரங்கங்கள், இசைக்கச்சேரிகள் என ஆழ்வார் திருநகரியே கோலாகலமாக இருக்கும். வருகிற 1.6.2023 அன்று ஒன்பதாம் நாள் விழாவாக திருத்தேர் உற்சவம் நடைபெறும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.