நாளை ஆயுதபூஜை; கடை வீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

நாளை ஆயுத பூஜை விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு புதுக்கோட்டை தெற்கு ராஜ வீதி கடைவீதி பகுதியில் ஆயுத பூஜைக்கு தேவையான பூஜை பொருட்கள், பொறி பொட்டுக்கடலை, பழங்கள் அலங்கார பொருட்கள் வாங்க ஒரே நேரத்தில் ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனர்.

நாளை ஆயுத பூஜை விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனை அடுத்து நாடு முழுவதும் ஆயுத பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர்.‌ அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை தெற்கு ராஜ வீதியில் உள்ள கடைவீதி பகுதியில் பூஜை பொருட்கள், பழங்கள், வாழை மரக்கட்டைகள், தோரணங்கள், பொறி பொட்டுக்கடலை, திஷ்டி கயிறுகள், பூசணிக்காய் உள்ளிட்ட பொருட்களை வாங்க ஒரே நேரத்தில் ஏராளமான மக்கள் குவிந்து வருவதால் அப்பகுதியே விழாக்கோலம் கொண்டுள்ளது.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் போதிய வியாபாரமின்றி தவித்து வந்த நிலையில், தற்பொழுது வியாபாரம் அதிகரித்து வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அனைத்து வகையான பழங்களும் 120 முதல் 160 ரூபாய் வரையிலும், பொறி பொட்டுக்கடலை அவல் சர்க்கரை கலவை 30 ரூபாய்க்கும் பூசணிக்காய் 60 ரூபாயிலிருந்தும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் ஒரு ஜோடி வாழை கன்றுகள் 40 ரூபாய்க்கும், ஐந்து தோரணங்கள் 20 ரூபாய்க்கும் அதேபோல் தேங்காய் பழங்களும் அதிக அளவு விற்பனையாகி வருகிறது. காலை முதலே கூட்டம் அதிகரித்து வருவதால் இன்று மாலை மக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment