மதிமுகவுக்கு ஆவடி துணை மேயர் பதவி! கூடவே 3 நகராட்சித் துணைத் தலைவர் பதவி!!
நாளைய தினம் நம் தமிழகத்தில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி நகர் மன்ற தலைவர், நகர்மன்ற துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பெரும்பாலும் திமுகவே தலைமைப் பொறுப்பை பெறும் என்பது தவிர்க்க முடியாததாக காணப்படுகிறது.
ஏனென்றால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவு அந்த அளவிற்கு திமுகவிற்கு பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதலே வரிசையாக திமுக கூட்டணி கட்சிகளுக்கு பதவி ஒதுக்கீட்டினை அறிவித்து வருகிறது.
அதன்படி முதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் என வரிசையாக கூட்டணி கட்சிகளுக்கு பதவி பங்கீட்டை அறிவித்து வந்தது.
இந்த நிலையில் தற்போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பதவி பங்கீடு குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி மதிமுகவுக்கு ஆவடி துணை மேயர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவியை மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று திமுக கூறியுள்ளது. மாங்காடு நகராட்சி தலைவர் பதவியும், 3 நகராட்சி துணைத் தலைவர் பதவிகளும் மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருவேங்கடம், ஆடுதுறை, சென்னசமுத்திரம் உள்ளிட்ட பேரூராட்சித் தலைவர் பதவிகளும் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாளையம், அவல்பூந்துறை, அரச்சலூர் பேரூராட்சி துணைத் தலைவர் பதவிகள் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
