மேகதாது அணை கட்டும் முயற்சியை முறியடிக்க வேண்டும் – வைகோ
இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிக்கையில் தெரிவித்தாவது:
கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, மார்ச் 4 ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்த 2022-23-ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கையில், மேகேதாட்டு அணை கட்டுவதற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே முதல்வர் பொறுப்பு ஏற்றவுடன், முதன் முறையாக டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின் ஜூன் 16, 2021-ல் பிரதமர் மோடியை சந்தித்தபோது, “மேகதாது அணைத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது” என்று நேரில் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
பின்னர் ஜூலை 12, 2021-ல் முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு, எந்தக் காரணம் கொண்டும் மேகதாது அணைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.
இதனை தொடர்ந்து ஜூலை 16, 2021 -ல் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு டெல்லி சென்று ஒன்றிய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தைச் சந்தித்து, தமிழகத்தின் எதிர்ப்பை எடுத்துக் கூறியதாக தெரிவித்தார்.
ஒன்றிய பா.ஜ.க. அரசு, கர்நாடக மாநிலத்திற்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வருவதால், மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தற்போது ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருப்பதாக கூறினார்.
ஒன்றிய பா.ஜ.க. அரசு இதில் திட்டவட்டமான அறிவிப்பை வெளியிட வேண்டும். கர்நாடக மாநிலத்தின் முயற்சியை முறியடித்திட தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை துரிதப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
