அத்தி வரதரை தரிசிக்க இப்படியெல்லாமா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கு?!

74b38c5d6372550d0fb43555a6697720

கோவில் நகரமான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் திருக்குளமான அனந்த சரஸ் நீருக்குள் வீற்றிருக்கும் அத்தி வரதர், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியில் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். மொத்தம் 48 நாட்கள் காட்சி அளிப்பார். 24 நாட்களுக்கு சயன கோலத்திலும், அடுத்த 24 நாட்களுக்கு நின்ற கோலத்திலும் காட்சியளிப்பார். அதனால், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தாலும், கோவில் நிர்வாகத்தாராலும் விஷேச ஏற்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

5aa4f388cb6c8d203f9c5b4b360d71a3

அத்திவரதரின் தரிசனத்துக்காக வரும் பக்தர்களின் வசதிக்காக, தற்காலிகப் பேருந்து நிறுத்தம், மருத்துவ முகாம், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் பக்தர்களுக்குச் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நகரத்தில் தற்காலிகப் பேருந்து நிலையங்களை ஓரிக்கை, ஒலிமுகமதுப்பேட்டை, பச்சையப்பன் கல்லூரி வளாகம் என மூன்று இடங்களில் உண்டாக்கி இருக்கிறார்கள்.

மேலும், தனியார் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காகப் பச்சையப்பன் கல்லூரி (நசரத்பேட்டை), திருவீதிபள்ளம், லாலா தோட்டம் (நகரம்), ஒலிமுகமதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் வாகன நிறுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

b8c800b1e327401169b78b64e9d465ea

சென்னை, திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, திருப்பதி, பெங்களூரு போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் ஒலிமுகமதுப்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.

உத்தரமேரூர், வந்தவாசி, திண்டிவனம், திருச்சி, புதுச்சேரி மற்றும் செய்யாறு, திருவண்ணாமலை போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் ஓரிக்கை பேருந்து நிலையத்திலிருந்தும் , தாம்பரம், செங்கல்பட்டு, கல்பாக்கம், மாமல்லபுரம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் நத்தப்பேட்டை, வையாவூர் வழியாக மாற்றுவழியில் மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்து புறப்படும்.

தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து கோயில் பகுதிக்குச் செல்லும் போக்குவரத்துக்கென நிமிடத்துக்கு 20 அரசுப் பேருந்துகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

ab022d6ec1adab9e85e95d1d3b2b32b7

காஞ்சிபுரம் நகராட்சிப் பகுதியில் 70 கழிப்பிடங்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், கோயிலைச் சுற்றியுள்ள 4 மாட வீதிகளிலும் ஆண், பெண் என இருவருக்கும் தலா 11 வீதம் 22 தற்காலிகக் கழிப்பிடம் கூடுதலாக அமைத்துள்ளனர். சின்ன காஞ்சிபுரம் பகுதியில் 36 கழிப்பிடங்களும் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் 92 கழிப்பிடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்காலிகப் பேருந்து மற்றும் வாகனம் நிறுத்தும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் உட்புறத்தில் 2 சுத்திகரிப்பு எந்திரங்களும் வெளிப்புறத்தில் 4 சுத்திகரிப்பு எந்திரங்களும் பொருத்தப்பட்டுள்ளது. நகரின் முக்கிய பகுதிகளில் 6 புதிய சுத்திகரிப்பு எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கக் குடிநீர்த் தொட்டி கோயிலுக்குள் ஒன்றும், கோயிலுக்கு வெளிப்புறத்தில் 10 இடங்களிலும் அமைக்கப்படவுள்ளன. நகரின் முக்கிய பகுதிகளில் 85 இடங்களில் 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்படவுள்ளன.

100மீக்கு ஒரு சிசிடிவி கேமராவினை பொருத்தி குற்ற நிகழ்ச்சிகள் எதும் நடைப்பெறாவண்ணம் போலீசாரால் கண்காணிக்கப்படுகிறது. சுகாதாரத் துறையின் மூலமாகக் கோயிலுக்கு உள்பகுதியில் 5 மருத்துவக் குழுக்களும் கோயிலுக்கு வெளியில் 4 மருத்துவக் குழுக்களும் அமைக்கப்பட உள்ளன. முக்கிய பகுதிகளில் 108 ஆம்புலன்ஸுடன் கூடிய தற்காலிக மருத்துவ அறைகள் அமைத்து 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்திவரதர் வைபவத்தை ஒட்டி முன் அனுமதி பெற்ற பின்னரே அன்னதானம் வழங்கப்படும். அதுவும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே உணவுகள் வினியோகிக்கப்படவேண்டும்.

cc9d46a8538abe26c9c36da52374d9ef

பக்தர்கள் அனைவரும் அத்திவரதரை தரிசிக்க கிழக்கு ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். தேசிகர் சந்நிதி வழியாக வசந்த மண்டபத்தை அடைந்ததும் அத்திவரதரை தரிசனம் செய்யலாம். அங்கிருந்து ஸ்ரீதேவராஜர் மற்றும் தாயார் சந்நிதிகளுக்குச் செல்வதற்காக மேற்கு ராஜகோபுரத்திலிருந்து தனியாக ஒரு வரிசை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.இந்தவழியாக மூலவர் மற்றும் தாயாரைத் தடையின்றி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தரிசனம் முடிந்த பின்பு மேற்கு ராஜகோபுரம் வழியாக வெளியேற வேண்டும்.. பொது தரிசனம், சிறப்பு தரிசனம் என இரண்டு வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பொதுதரிசனத்துக்கு எவ்விதக் கட்டணமும் இல்லை. சிறப்பு தரிசனத்துக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். வி.ஐ.பி-க்கள் மேற்கு கோபுரம் வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். வி.ஐ.பி தரிசனத்துக்கு 500 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தரிசன ஏற்பாடுகளும், நேரமும், கட்டணமும் கோவில் நிர்வாகத்தினரால் மாறுதலுக்குட்படலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews