90 வயதில் பரதநாட்டியம் ஆடி அசத்திய பழம்பெரும் நடிகை…

பழம்பெரும் நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான நடிகை வைஜெயந்திமாலா தனது 90 ஆவது வயதில் பரதநாட்டியம் ஆடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வயது என்பது வெறும் எண்ணிக்கை தான் என்பதற்கு சான்றாக இது அமைந்துள்ளது.

1933 ஆம் ஆண்டு பிறந்த வைஜெயந்திமாலா நடிகை மட்டுமல்லாமல் சிறந்த நடன கலைஞர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவரும் ஆவார். 1949 ஆம் ஆண்டு தனது 16 ஆம் வயதில் ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்த ‘வாழ்க்கை’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தென்னிந்திய நடிகையாக அறிமுகமாகி, பாலிவுட்டில் களமிறங்கிய முதல் தென்னிந்திய நடிகை என்ற பெருமைப்பெற்றவர்.

பரதநாட்டிய கலைஞர், நடிகை, கர்நாடக இசைப்பாடகி, நடன வடிவமைப்பாளர், அரசியல்வாதி என்ற பன்முகங்களை கொண்டவர் நடிகை வைஜெயந்திமாலா. 1958 ஆம் ஆண்டு வெளியான ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ திரைப்படத்தில் ‘கண்ணும் கண்ணும் கலந்து’ என்ற பாடலில் நாட்டிய பேரொளி பத்மினியுடன் இவர் ஆடிய போட்டி பாடல் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பாடல் ஆகும். பத்மஸ்ரீ, பத்மவிபூஷன், கலைமாமணி, பிலிம்பேர் போன்ற பல விருதுகளை வென்றவர்.

அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை விழா கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி நடைப்பெற்றது. அதன் பின்பு ஜனவரி 27 ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக 45 நாட்கள் ராக சேவா என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகள் அயோத்தி ராமர் கோவிலில் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர்.

இந்த நிலையில், 90 வயதாகும் பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடி காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். வயதானாலும், அபிநயம் பிடித்து நளினமாக இவர் ஆடியது பார்ப்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. கடந்த மாதம் 26 ஆம் தேதி நடிகை வைஜெயந்திமாலாவிற்கு பத்மவிபூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. தற்போது இவரது பரதநாட்டிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல் பலரிடம் இருந்து பாராட்டையும் பெற்று வருகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...