புரட்டாசி மாத ராசி பலன் 2018!

மேஷம்: இந்த புரட்டாசி மாதம் உங்களுடைய பொருளாதாரம் சிறப்பாக இருக்கின்றது. இதுவரை எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் எதிர்பார்த்தபடி நல்லபடியாக முடிவடையும். அக்டோபர் 10-ம் தேதி வரை குரு பகவான் ஏழாம் பார்வையாக உங்களது ராசியை பார்ப்பதால் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடும். உங்கள் மகளுக்கு அல்லது மகனுக்கு நல்ல வரன் அமையக்கூடும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் பத்தாம் வீட்டில் உச்சம் பெற்று இருப்பதால் தொட்டது துலங்கும். வியாபாரம் சீராக நடைபெறக்கூடும். வசதி வாய்ப்புகள் பெருகும். ஆரோக்கியம் சீராகும்.
 
Purattasi matha rasi palan 2018

மேஷம்:

புரட்டாசி மாத ராசி பலன் 2018!

இந்த புரட்டாசி மாதம் உங்களுடைய பொருளாதாரம் சிறப்பாக இருக்கின்றது. இதுவரை எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் எதிர்பார்த்தபடி நல்லபடியாக முடிவடையும்.

அக்டோபர் 10-ம் தேதி வரை குரு பகவான் ஏழாம் பார்வையாக உங்களது ராசியை பார்ப்பதால் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடும். உங்கள் மகளுக்கு அல்லது மகனுக்கு நல்ல வரன் அமையக்கூடும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் பத்தாம் வீட்டில் உச்சம் பெற்று இருப்பதால் தொட்டது துலங்கும். வியாபாரம் சீராக நடைபெறக்கூடும்.

வசதி வாய்ப்புகள் பெருகும். ஆரோக்கியம் சீராகும். பொதுவாக மேஷம் ராசியில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பானவர்கள், அதிலும் ராசிநாதன் தொழில் ஸ்தானத்தில் உச்சம் அடையும் பொழுது தொழிலில் நல்ல வளர்ச்சி அடைவீர்கள். உங்களுக்கு வருகின்ற வருமானத்தை புத்திசாலித்தனமாக சேர்த்து வையுங்கள். கடந்த காலத்தை பாடமாக வைத்து கொண்டு சேமிப்பு திட்டத்தில் பணத்தை சேர்த்து வையுங்கள்.

விரோதிகள் விலகுவார்கள். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.  உங்கள் ராசிக்கு 9,12-ம் இடங்களின் அதிபதியான குரு அக்டோபர் 10- ம் தேதி வரை ஏழாம் வீட்டில் இருந்து கொண்டு உங்களது ராசியை ஏழாம் பார்வையாக பார்க்கின்றார். அதன் பிறகு குரு பகவான் எட்டாம் இடத்தில் விருச்சிகம் ராசியில் வரும் பொழுது செலவுகள் அதிகரிக்கும். பொருளாதாரம் திருப்திகரமாக இருந்தாலும், சற்று செலவுகள் அதிகரிக்கும்.

மூன்றாம் நபரை நம்பி வீட்டில் நடைபெறும் விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். அவர்களால் பிரச்சனைகள் வரக்கூடும். அக்டோபர் 4-ம் தேதிக்குப் பிறகு கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையக்கூடும். இல்லத்தில் குழப்பான சூழ்நிலை உருவாகலாம். விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்.

தொடர்ந்து ஒன்பது வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள். உங்களுக்கு ஏற்படுகின்ற வீண் விரயங்கள், கஷ்டங்கள், குழப்பங்கள் அனைத்தும் தீரும்.

ரிஷபம்:

புரட்டாசி மாத ராசி பலன் 2018!

இந்த புரட்டாசி மாதம் உங்களுக்கு மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்படும். மாத தொடக்கத்தை விட மாத பிற்பகுதியில் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள். இதுவரை அஷ்டமத்தில் இருக்கும் சனி பகவானால் எண்ணற்ற சோதனைகளை சந்தித்து வந்தீர்களே, இனி நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியினால் மாற்றத்தை உணர்வீர்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஆறாம் இடத்தில் குருவுடன் இணைந்து இருப்பதால் எதிலும் நிதானத்தை கடைபிடியுங்கள். தீர யோசித்த பிறகே செயலில் ஈடுபடுங்கள். எதிலும் அதிக முதலீடு செய்யாதீர்கள்.

அஷ்டமத்தில் சனி பகவான் தொடர்வதால் இல்லத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் வரக்கூடும். இல்லத்தில் இருப்பவர்களிடம் விட்டு கொடுத்து செல்லுங்கள். வரவு சீராக வந்தாலும், செலவுகள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அடுத்தடுத்து இருந்து கொண்டே இருக்கக்கூடும். முன்றாம் இடத்தில் ராகுவும், ஒன்பதால் இடத்தில் கேதுவும் தொடர்வதால் வருகின்ற வாய்ப்புகள் சற்று நழுவி போகக்கூடும். ஒரு முறைக்கு பல முறை முயற்சி செய்த பிறகே காரியங்களில் வெற்றி உண்டாகும்.

வருகின்ற அக்டோபர் 11-ம் தேதி குரு பெயர்ச்சியாகி விருச்சிகம் ராசிக்கு வருவதால் நல்ல மாற்றங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு குரு ஏழாம் இடத்தில் இருந்து கொண்டு ஏழாம் பார்வையாக உங்கள் ராசியை பார்ப்பதால் எதையும் எதிர்கொள்கின்ற ஆற்றல் அதிகரிக்கும். உற்சாகமாக செயல் படுவீர்கள். இந்த குரு பெயர்ச்சியினால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடும். சுப விரயங்களும் ஏற்படக்கூடும். புதிய வேலை அமையக்கூடும். அலுவலகத்தில் அதிகம் உழைக்க வேண்டி வரக்கூடும். தாய் மற்றும் சகோதர, சகோதரி உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள்.

வியாபாரத்தில் யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். அரசு தேர்வுக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல செய்தி வரக்கூடும். அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று தட்சிணாமூர்த்தியகை வியாழக்கிழமை அன்று  வணங்கி வாருங்கள் நல்லவை நடைபெறக்கூடும்.

மிதுனம்:

புரட்டாசி மாத ராசி பலன் 2018!

இந்த புரட்டாசி மாதம் சிந்தித்து செயல்படுகின்ற மாதமாக இருக்கும். வருகின்ற வாய்ப்புகளை நழுவ விடாமல் தயங்காமல் ஏற்று கொள்ளுங்கள். உங்கள் ராசிநாதன் புதன் கன்னி ராசியில் உச்சம் பெற்று இருந்தாலும், சூரியனோடு இணைந்து அஸ்தமனம் ஆகின்றார். உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் சனி பகவான் தொடர்வதால் ஆரோக்கியத்தில் தொல்லைகள் அதிகரிக்கும். ஏழாம் வீட்டில் இருக்கும் சனி பகவான் ஏழாம் பார்வையாக உங்கள் ராசியை பார்ப்பதால் செய்கின்ற காரியங்களில் தடைகளும், தாமதமும் ஏற்படக்கூடும். ஆனால் குரு பகவான் ஒன்பதாம் பார்வையாக உங்களது ராசியை அக்டோபர் 10-ம் தேதி வரை பார்ப்பதால் தடைகளை வெற்றி படியாக மாற்றுவீர்கள்.

மந்தமாக நடந்த வியாபாரம், தொழில் விறுவிறு என்று நடைபெறக்கூடும். உங்களுக்கு நெருக்கடி கொடுத்த மேல் அதிகாரிகள்  வேலையில்  மாற்றலாகி வேறு ஊருக்கு அல்லது அதே பணியில் வேறு கிளைகளுக்கு மாற்றம் ஆகலாம். சுக்கிரனால் இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். குருவுடன் சுக்கிரன் இணைந்து இருக்கும் பொழுது திருமணம் பேச்சுவார்த்தை நல்ல விதமாக முடிவடையும்.

குரு பகவான் அக்டோபர் 10-ம் தேதி வரை ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசியை பார்ப்பதால் வரும் இன்னல்களை சமாளிக்கின்ற ஆற்றல் பிறக்கும். அதன் பிறகு குரு பகவான் அக்டோபர் 11-ம் தேதி பெயர்ச்சியாகி விருச்சிகம் ராசிக்கு வருகின்றார். குரு பகவான் உங்களது 6-ம் இடத்தில் இருந்து கொண்டு உங்களது தன ஸ்தானத்தை பார்ப்பதால் பணவரவு சீராக வரக்கூடும்.

மூன்றாம் நபரை நம்பி உங்கள் வீட்டு விஷயங்களை சொல்லிக் கொண்டு இருக்க வேண்டாம். அவர்களால் வீண் பிரச்சனைகள், குழப்பம் நிலவும். நீண்ட நாட்களுக்காக கிடைக்காத பணத்தொகை அல்லது பொருள் இப்பொழுது எதிர்பாராத விதமாக கிடைக்கும்.

கடகம்:

புரட்டாசி மாத ராசி பலன் 2018!

இந்த புரட்டாசி மாதம் வெற்றி பெறும் மாதமாக இருக்கும். உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டின் அதிபதி சூரியன் மூன்றாம் வீட்டில் நுழைந்திருப்பதால் எதிர்ப்புகள் நீங்கும்.

புதிய வாய்ப்புகள் வரக்கூடும். மாற்றங்கள் நிகழும். கடந்த காலத்தை பாடமாக  வைத்து கொண்டு வருகின்ற மாற்றங்களை தயங்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.

ராகு ஜென்மத்திலும், கேது ஏழாம் வீட்டிலும் தொடர்வதால் அவ்வப்பொழுது கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். அக்டோபர் 11-ம் தேதி குரு பெயர்ச்சியாகி விருச்சிகம் ராசியில் வருகின்றார். அதன் பிறகு உங்களது ராசியை ஒன்பதாம் பார்வையாக குரு பார்ப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் மறைந்து ஒற்றுமை புலப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

புனித யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். விட்டு போன குலதெய்வ பிரார்த்தனைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறி விறு விறு என்று வியாபாரம் நடைபெறும். இதுவரை மூன்றாம் நபரின் பேச்சை கேட்டு பல விதத்தில் பணம் விரயங்கள், பொருள் இழப்புகளை சந்தித்து வந்தீர்களே, இனி அந்த நிலை மாறும். தவறான பாதையில் உங்களை வழிநடத்துபவர்களை இனம் கண்டு ஒதுங்கி விடுவீர்கள்.

தொழிலில் நல்ல வளர்ச்சி அடைவீர்கள். உங்களது 7,8-ம் இடங்களின் அதிபதியான சனி பகவான் 6-ம் வீட்டில் இருப்பதால் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். உங்களது முயற்சிக்கேற்ப வெற்றியை காணும் மாதமாக இருக்கப் போகின்றது.

சிம்மம்:

புரட்டாசி மாத ராசி பலன் 2018!

இந்த புரட்டாசி மாதம் உங்களுக்கு திடீர் திருப்பங்கள் உண்டாகும். உங்கள் ராசிநாதன்  சூரியன் புதனோடு இணைந்து கன்னி ராசியில் வலுவாக இருப்பதால் தொட்டது துலங்கும் மாதமாக இருக்கும். மூன்றில் சுக்கிரன் குருவோடு இணைந்து இருப்பதால் இல்லத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உங்களது பெற்றோர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். ஆடை, ஆபரணங்கள், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அக்டோபர் 11-ம் தேதி குரு பெயர்ச்சியாகி விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். உங்கள் ராசிக்கு குரு நான்காம் வீட்டில் வரும்போது நினைத்தது நிறைவேறும். உங்களது தளராத முயற்சியால் வெற்றியை காணும் மாதமாக இருக்கும். தைரியம், தன்னம்பிக்கை கூடும். எதையும் துணிச்சலுடன் செய்து சாதனை புரிவீர்கள். வெகுநாட்களாக தடைபட்டுக் கொண்டு இருந்த திருமண சுபகாரிய பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடிவடையும்.

குறிப்பாக மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வேலை சுமை அதிகரிக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் வேலை செய்வீர்கள். உங்களின் பிள்ளைகள் சம்மந்தமாக நல்ல விஷயங்கள், விசேஷம் நடைபெறக்கூடும். தொழிலில் அபரீதமான வளர்ச்சி ஏற்படக்கூடும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றம் உண்டாகும். ஆரோக்கியம் சீராகும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வரக்கூடும். புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு ஒரு முறைக்கு பல முறை முயன்ற பிறகு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடும்.

சந்தேகத்தால் பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். திடீர் பணவரவு உண்டாகும். உங்களது தாயாரின் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். உச்சம் பெற்ற செவ்வாய் கேதுவுடன் இணைந்து ஆறாம் இடத்தில் இருப்பதால் பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள்.

கன்னி:

புரட்டாசி மாத ராசி பலன் 2018!

இந்த புரட்டாசி மாதம் கனவுகள் நனவாகும் மாதமாக இருக்கும். உங்களின் ராசிநாதன் புதன் உங்கள் ராசியில் இருப்பதால் நல்ல வாய்ப்புகள் வரக்கூடும். உங்களின் சாதுரியமான பேச்சால் உங்களது காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். உங்களது விரய ஸ்தானாதிபதி உங்கள் ராசியில் புதனோடு இணைந்து இருப்பதால் வீண் விரயங்கள் ஏற்படக்கூடும். உங்களுக்கு செலவுகள் அடுத்தடுத்து இருந்து கொண்டே இருக்கக்கூடும்.

உங்கள் இரண்டாம் வீட்டின் அதிபதி சுக்கிரன் சொந்த வீட்டில் குருவுடன் இணைந்து இருப்பதால் இல்லத்தில் சுப நிகழ்ச்சி பேச்சுவார்த்தைகள் நல்ல விதத்தில் முடிவடையும். நல்ல வரன் அமையக்கூடும். பயணங்கள் அதிகரிக்கக்கூடும். வீடு கட்ட போட்ட திட்டங்கள் நிறைவேறும். நிலுவையில் இருந்த பணத்தொகை கைக்கு வரக்கூடும்.

சிறு சிறு விஷயத்திற்கு கூட கோபம் அதிகரிக்கும். வீட்டில் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். யாரையும் வீண் சந்தேகப் பட்டு சண்டை போட வேண்டாம். குறிப்பாக உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீட்டில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லுங்கள். பெற்றவர்களை புண்படும் படி பேசாதீர்கள். வெளி நபர்களுக்காக வீட்டில் இருப்பவர்களை மனம் புண்படும் படி நடந்து கொள்ளாதீர்கள்.

உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சனி பகவான் இருப்பதால் ஆரோக்கியத்தில் தொல்லைகள் ஏற்படக்கூடும். மருத்துவ செலவுகள் அதிகரக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். தொழிலில் உங்களுக்கு கீழ் பணிபுரியும் நபர்களால் பிரச்சனைகள் உருவாகலாம். வாகனத்தை இயக்கும் பொழுது கவனம் தேவை.

அக்டோபர் 11-ம் தேதி குரு பெயர்ச்சியாகி விருச்சகம் ராசிக்கு வருகிறார்.

மூன்றாம் நபரை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்காதீர்கள். பண விரயம் ஆகும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

துலாம்:

புரட்டாசி மாத ராசி பலன் 2018!

இந்த புரட்டாசி மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் குருவுடன் இணைந்து இருப்பதால் அனைத்து விதத்திலும் நன்மை நடைபெறும் மாதமாக இருக்கப் போகின்றது. இளமை, அழகு கூடும். ஆடம்பர வசதிகள் பெருகும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஆட்சி பலத்துடன் இருப்பதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் பிறக்கும். இதுவரை நிலுவையில் இருந்து வந்த காரியங்களை படிப்படியாக முடித்து விடுவீர்கள்.

சூரியன் பன்னிரண்டாம் இடத்தில் கன்னி ராசியில் இருப்பதால் எதிர்காலம் பற்றி சிந்தித்துக் கொண்டு இருப்பீர்கள். தூக்கமின்மை உண்டாகும். பன்னிரண்டாம் இடத்தில் புதன் ஆட்சி பலத்துடன் சூரியனோடு இணைந்து இருப்பதால் திடீர் செலவுகள் உண்டாகும். உங்கள் ஜென்மத்தில் இருக்கின்ற குரு பகவான் அக்டோபர் 11-ம் தேதி விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் குரு வரும் பொழுது சகல விதத்தில் நன்மைகள் ஏற்படக்கூடும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை புலப்படும்.

அரசு வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம், சம்பள உயர்வு ஏற்படக்கூடும். குறிப்பாக முப்பது வயதை தாண்டிய துலாம் ராசியினருக்கு செட்டில் ஆகும் நேரமாக இருக்கப் போகின்றது. அலுவலகத்தில் உங்களது திறமைகள் வெளிப்படும். மேல் அதிகாரிகள் அதனை கண்டு உங்களுக்கு கூடுதலாக பொறுப்புகளை வழங்கலாம். அதிகம் உழைக்க வேண்டி வரக்கூடும். உங்களது உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.

சனி பகவான் மூன்றாம் இடத்தில் இருப்பதால் செய்கின்ற தொழிலில் நன்கு வளர்ச்சி ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி லாபத்தை பெருக்குவீர்கள். கலை பொருட்கள், அழுகு சாதன பொருட்கள், உணவு பொருட்கள், வீட்டிற்கு பயன்படுத்தும் பொருட்களை வியாபாரம் செய்கின்றவர்களுக்கு நல்ல லாபம் வரக்கூடும்.

விருச்சிகம்:

புரட்டாசி மாத ராசி பலன் 2018!

இந்த புரட்டாசி மாதம் உங்களுக்கு  வசந்த காலமாக இருக்கும். இதுவரை எண்ணற்ற சோதனைகள், வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு வேதனைகளை அனுபவித்தீர்களே, இனி உங்களுக்கு நல்ல காலம் உண்டாக போகின்றது. உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று இருப்பதால் மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் உங்களது செல்வாக்கு, புகழ் உயரும். உங்கள் மீது வீண் பழிச்சொல், அவப்பெயர் உண்டாகுபவர்களை இனம் கண்டு ஒதுக்குவீர்கள்.

வருகின்ற அக்டோபர் 11-ம் தேதி குரு பெயர்ச்சியாகி உங்கள் ராசியில் அமர்வதால் தொட்டது துலங்கும். ஜென்ம ராசியில் குரு வரும் பொழுது இருளில் இருந்த நீங்கள் வெளிச்சத்திற்கு வருவீர்கள். நல்லவர்கள் யார், கெட்டவர் யார் என்பதை அறிந்து கொள்வீர்கள். உங்கள் பிள்ளைகள் சம்மந்தமாக எந்த சுப காரியங்கள் நடைபெறவில்லையே என்று கவலைப்பட்டு கொண்டு இருப்பவர்களுக்கு, நல்ல செய்தி வரக்கூடும்.

அலுவலத்தில் உங்களது திறமை வெளிப்படக்கூடும். அதனால் உங்களுக்கு புதிய பொறுப்புகளைக் கொடுப்பார்கள். வேலை சுமை அதிகரிக்கும். பணம் இருமடங்கு வரக்கூடும். வியபாரத்தில் கணிசமான  லாபம் வரக்கூடும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடும். வீடு, மனை வாங்கும் முயற்சி கைக்கூடும்.

அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, கேட்கின்ற இடத்தில்  இடமாற்றம் உண்டாகும். சுக்கிரன் பன்னிரண்டாம் வீட்டில் இருப்பதால் சுப விரயங்கள் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்த்திடுங்கள். கணவன் மனைவி இடையே கருத்து  வேறுபாடு தோன்றக்கூடும் என்பதால் அனுசரித்து செல்லுங்கள். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.மேலும் உங்களுக்கு நல்லவை நடைபெற குலதெய்வத்தையும், முருகனையும் வழிபடுங்கள் சகல விதத்திலும் நன்மை உண்டாகும்.

தனுசு:

புரட்டாசி மாத ராசி பலன் 2018!

இந்த புரட்டாசி மாதம் சிந்தித்து செயல்படக் கூடிய மாதமாக இருக்கும். சூரியன் பத்தாம்  இடத்தில் வலுவாக இருப்பதால் அரசு சம்மந்தமான காரியங்கள் நல்ல விதமாக முடிவடையும். அரசு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல செய்தி வரக்கூடும். தந்தை வழி  உறவுகளால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் அதிகம் உழைக்க வேண்டி வரக்கூடும். சிலருக்கு பணியிடத்தில் நெருக்கடியான சூழல் உருவாகும். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.

உங்கள் ஜென்மத்தில் சனி இருப்பதால் எந்த காரியம் செய்தாலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்த பிறகே செயலில் ஈடுபட வேண்டும். யாருக்கும் வீண் வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சொந்த வீட்டில் இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். மனைவி வழி சொந்த பந்தங்கள் மத்தியில் உங்களின் செலவுக்கு உயரும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.

பிள்ளைகளின் எதிர்காலம் கருதி செலவுகள் அதிகம் செய்ய வேண்டி வரக்கூடும். ஆரோக்கியத்தில் தொல்லைகள் ஏற்படலாம். சிலருக்கு தோல் சம்மந்தமான பிரச்சனைகள், கட்டிகள் தோன்றக்கூடும். குரு, சுக்கிரன் இணைந்து உங்களது பதினோராம் வீட்டில் இருப்பதால் புனித யாத்திரைகள், பயணங்கள் அதிகரிக்கும்.

வருகின்ற அக்டோபர் 11-ம் தேதி குரு பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சி ஆகின்றார். உங்களது பன்னிரண்டாம் வீட்டிற்கு குரு வரும் பொழுது சுப விரயங்கள் ஏற்படக்கூடும். நீண்ட நாட்களாக தடைபட்டுக் கொண்டு இருந்த காரியம் இப்பொழுது எளிதில் நடைபெற்று விடும். ஏழரைச்சனி ஜென்மச்சனியாக தொடர்வதால் மூன்றாம் நபர்களை நம்பி எந்த விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அவர்களால் உங்களுக்கு அவப்பெயர், வீண் செலவுகள், அலைச்சல் ஏற்படக்கூடும். மொத்தத்தில் தனுசு ராசியினர்களுக்கு முக்கியமான கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எதிலும் நிதானத்துடனும், பணிவுடனும் நடந்து கொள்ள வேண்டும்.

மகரம்:

புரட்டாசி மாத ராசி பலன் 2018!

இந்த புரட்டாசி மாதம் உங்களுக்கு முன்னேற்றமான மாதமாக அமையும். சுக்கிரன் ஆட்சி பலத்துடன் 10-ம் வீட்டில் குருவுடன் இணைந்து இருப்பதால் செய்கின்ற வேலையில் திடீர் திருப்பங்கள் வரக்கூடும். சிலருக்கு எதிர்பாராத விதமாக பணவரவு, பதவி உயர்வு, இடமாற்றம் ஏற்படக்கூடும். அக்டோபர் 11-ம் தேதி குரு பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சி ஆகின்றார். உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் இருந்த குரு பதினோராம் இடத்தில் வரும் பொழுது நல்ல வாய்ப்புகள் வரக்கூடும்.

உங்கள் ராசியில் செவ்வாய் உச்சம் பெற்று இருப்பதால் சுறுசுறுப்புடன் வேலை செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். ஒன்பதாம் இடத்தில்  சூரியன் இருப்பதால் தந்தையாரின் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.  இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். உடன்பிறப்புகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தள்ளிப்போன காரியங்கள் தானாகவே நடைபெறக்கூடும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். புதிய வேலைக்கு முயற்சி செய்கின்றவர்களுக்கு  நல்ல வேலை அமையக்கூடும். இதுவரை சுமாராக இருந்த வியாபாரம் குரு பெயர்ச்சிக்கு பிறகு நல்ல லாபம் வரக்கூடும். முன்கோபத்தை தவிர்த்திடுங்கள். உங்கள் ராசியில் செவ்வாய் கேதுவுடன் இணைந்திருப்பதால் நீண்ட நாட்களாக தள்ளி போன பிரார்த்தனைகளை செய்து முடிப்பீர்கள்.மாத முதற்பகுதியை விட மாத இறுதியில் தான் அதிக அளவில் மாற்றங்களும், முன்னேற்றமும் நடைபெற போகின்றது.

கும்பம்:

புரட்டாசி மாத ராசி பலன் 2018!

இந்த புரட்டாசி மாதம் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கின்ற மாதமாக இருக்கும். உங்கள் ராசிநாதன் சனி பகவான் பதினோராம் வீட்டில் இருப்பதால் பொருளாதார நிலை மேம்படும். உங்கள் ராசியை குரு பார்ப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். தாராளமான பணவரவு இருந்தாலும் செலவுகள் அடுத்தடுத்து இருந்து கொண்டே இருக்கக்கூடும். ஒன்பதாம் இடத்தில் சுக்கிரன் சொந்த வீட்டில்  குருவுடன் இணைந்து இருப்பதால் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடும்.

உங்கள் ராசிக்கு 4,11-ம் இடங்களின் அதிபதியான செவ்வாய் 12-ம் இடத்தில்  ஆட்சி பலத்துடன் கேதுவுடன் இணைந்து இருப்பதால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சொத்து சம்மந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல விதத்தில் முடிவடையும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு நீங்கி ஒற்றுமை புலப்படும்.

சனியின் பார்வை உங்களது ராசியின் மீது விழுவதால் ஆரோக்கியத்தில் தொல்லைகள் ஏற்படும். புதன் சூரியனோடு இணைந்து இருப்பதால் உங்களது பிள்ளைகளின் வருங்காலம் குறித்து திட்டங்கள் தீட்டுவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் உங்களது செல்வாக்கு உயரும். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதனால் உங்களுக்கு புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உங்களது பணியை நேரத்திற்கு முடித்து விடுங்கள். மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் வரக்கூடும். புதிய யுக்திகளை பயன்படுத்தி வியாபாரத்தை பெருக்குவீர்கள்.

அக்டோபர் 11ம் தேதி குரு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சி ஆகின்றார். உங்கள் ராசியில் ஒன்பதாம் இடத்தில் இருந்து 10- இடத்திற்கு குரு பெயர்ச்சி ஆகின்றார். உங்கள் ராசிக்கு 2,11-ம் இடங்களுக்கு அதிபதியான குரு பகவான் ஜீவன ஸ்தானத்தில் வரும்போது பல வித மாற்றங்களை வழங்கப் போகிறார். விடாமுயற்சியினால் வெற்றி காணும் மாதமாக இருக்கப் போகின்றது.

மீனம்:

புரட்டாசி மாத ராசி பலன் 2018!

இந்த புரட்டாசி மாதம் உங்களுக்கு அலைச்சல் அதிகரிக்கின்ற மாதமாக இருக்கும். பழைய சொந்த பந்தங்கள் உங்களை தேடி வருவார்கள். சூரியன் ஏழாம் இடத்தில் இருப்பதால் வாழ்க்கை துணையின் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

அக்டோபர் 10-ம் தேதி வரை குரு அஷ்டமத்தில் இருப்பதால் செய்கிற வேலையை ஒரு முறைக்கு இரண்டு முறை செய்ய வேண்டி வரக்கூடும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். வேலை சம்மந்தமாக இட மாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றம் உண்டாகும்.

சுக்கிரன் எட்டாம் இடத்தில் ஆட்சி பலத்துடன் சொந்த வீட்டில் குருவுடன் இணைந்து இருப்பதால் சுப விரயங்கள் உண்டாகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன பிரார்த்தனைகளை சிறப்பாக இல்லத்தில் இருப்பவர்களுடன் செய்து முடிப்பீர்கள்.

இதுவரை உங்களது ராசிநாதன் குரு எட்டாம் இடத்தில் இருந்து கொண்டு செலவுகளை கொடுத்து வந்தார். அக்டோபர் 11-ம் தேதி துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார். உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருந்து கொண்டு ஐந்தாம் பார்வையாக குரு பார்ப்பதால் செலவுகள் குறையும். உங்களின் பிள்ளைக்கு நல்ல வரன் அமையக்கூடும்.

வியாபாரத்தில் கணிசமான லாபத்தை பெறுவீர்கள். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் இருக்கக்கூடும். அலுவலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லுங்கள்.

From around the web