அனைத்து தோஷங்கள் போக்கும் விஸ்வாமித்திரர் கோவில் நவகலச யாகம்

தமிழ்நாட்டில் நெல்லை வள்ளியூர் அருகே இருக்கும் முக்கியமான விஸ்வாமித்திரர் கோவில் பற்றி
 

 முனிவர் விஸ்வாமித்திரரின் யாகத்திற்கு இடையூறு செய்த தாடகை என்ற அரக்கி மற்றும் அரக்கர்களை கொன்ற காரணத்தால் ராமன் லட்சுமணனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பிரம்மஹத்தி தோஷம் போக்குவதற்காக யாகம் செய்ய இடம் தேடி, தில்லைவன காடான சிதம்பரம் வந்து காளி தேவியை பிரதிஷ்டை செய்து விட்டு, அவர்களோடு தென் திசை நோக்கி விஸ்வாமித்திரர் வந்தார். அதே தில்லை வனம் விஜயாபதியிலும் இருப்பதை கண்டு, அங்குள்ள தோப்பில் காளி தேவியை பிரதிஷ்டை செய்தார் விஸ்வாமித்திரர்.

அதன் பின்னர் ஹோம குண்ட விநாயகர், விஸ்வாமித்திர மகாலிங்க சுவாமி, அகிலாண்டேஸ்வரி அம்பாள் ஆகிய தெய்வங் களையும் பிரதிஷ்டை செய்த பின்னர் ஹோம குண்டம் வளர்த்து, யாகம் செய்து ராம, லட்சுமணர்களின் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கினார். பின்னாட்களில், விஸ்வாமித்திரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் பற்றி அறிந்த பாண்டிய மன்னன் இங்கே கோவில் எழுப்பி அவனது மீன் சின்னத்தை இரட்டை மீன்கள் வடிவத்தில் கோவிலுக்கு உள்புற முகப்பில் அமைத்து வைத்தான்.

அதனால் இங்குள்ள மஹாலிங்க ஸ்வாமி கோவிலுக்கு தோஷம் கழிக்க நிறைய பக்தர்கள் வருகின்றனர். இங்கு நவகலச யாகம் என்ற யாகம் செய்யப்படுகிறது. நம் வாழ்வில் உள்ள அனைத்து தோஷங்களும் இந்த நவகலச யாகத்தால் நீங்குவதாக ஐதீகம். இங்குள்ள கடற்கரையில் இந்த யாகம் செய்யப்படுகிறது. மதியம் 12 மணிக்கு மேல்தான் செய்வார்களாம்.

பால், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி, ஸ்நான பொடி, வெட்டிவேர், சந்தனம், விபூதி, குங்குமம் ஆகியவற்றை குடத்துக்கு ஒன்று வீதம் விட்டு நீர் கலந்து, வாசனாதி திரவியங்களை தூவி விட்டு, கலசங்கள் நவ கிரகங்கள் கோவிலில் உள்ள வரிசைப்படி அமைக்கப்படும். நவக்கிரக பரி காரத்துக்கு உரியவர் மேற்கண்ட கலசங்களுக்கு முன்பாக கிழக்கு பார்த்து அமர வைத்து பூஜைகள் செய்யப்படும். அதன் பின்னர் கோவில் வில்வ மரத்தடியில் அவரை அமர வைத்து ஒன்பது கலசங்களில் உள்ள தீர்த்தம் மூலம் நவ அபிஷேகம் செய்யப்படும் இந்த நவகலச யாகம் மூலம் அனைத்து பிரச்சினைகளும் சரியாவதாக ஐதீகம் . ராமர் லட்சுமணரின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பட்ட இடம் என்பதால், ராமேஸ்வரம் போல இதுவும் ஒரு புண்ணிய தீர்த்தமே ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த விஜயாபதி நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கடற்கரையோர சிறு கிராமம் ஆகும் இந்த விஜயாபதியில் மஹாலிங்க ஸ்வாமி கோவிலில் விஸ்வாமித்திரருக்கு தனி கோவில் உள்ளது. இவரை வணங்கி வாழ்வில் ஏற்றம் பெறுங்கள். இங்குள்ள சிவனை வணங்கி விஸ்வாமித்திரரை வணங்கி முறைப்படி நவகலச யாகம் செய்து கொண்டால் வாழ்வில் அனைத்தும் நீங்கப்பெறும் அனைத்து சாபங்களும் நீங்கும்.

From around the web