தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்த சூழலில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியுள்ள, காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் இதற்கு அசானி புயல் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இன்று புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து, 10 ஆம் தேதி அன்று ஆந்திரா- ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் என கணிக்கப்பட்டு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
இந்நிலையில் நாளை புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு,சேலம், நாமக்கல், தருமபுரி, காரைக்கால், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.