பாம்பை காட்டி பணம் பறித்த போதை ஆசாமி… இப்படி கூடவா பிச்சை எடுப்பாங்களா?

நாம் பேருந்துக்காக நிற்கும்போதோ அல்லது சாலையில் செல்லும் போதோ சிக்னல்களில் மற்றும் சாலையோரங்களில் பலர் யாசகம் பெறுவதை பார்த்திருப்போம். விருப்பம் உள்ளவர்கள் அவர்களுக்கு யாசகம் வழங்குவார்கள் விருப்பம் இல்லையெனில் இல்லை என கூறி அவர்களை அனுப்பி விடுவார்கள். இதை பெரும்பாலும் நாம் பார்த்திருப்போம்.

ஆனால் பொதுமக்களை மிரட்டி யாசகம் பெறுவதை பார்த்திருக்கிறீர்களா? அதுவும் கத்தியோ அல்லது ஆயுதங்களையோ காட்டி மிரட்டவில்லை. கொடிய விஷம் கொண்ட பாம்பை காட்டி மிரட்டி பொதுமக்களிடம் பணம் பறித்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஆனால் நம் ஊரில் அல்ல.

தெலுங்கான மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டத்தில் சங்கா ரெட்டி காவல் எல்லைக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் போதை ஆசாமி ஒருவர் சுமார் 6 அடி நீளமுள்ள பாம்பை கழுத்தில் சுற்றிக் கொண்டு கடைவீதி முழுவதும் சுற்றித்திரிந்துள்ளார்.

பின்னர், உணவகம் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் நுழைந்த அந்த நபர் பணம் கொடு இல்லையெனில் பாம்பை விட்டு கடிக்க விடுவேன் என கடை உரிமையாளர்களை மிரட்டி பணம் பறித்துள்ளார். இவரின் இந்த செயலை கண்டு பலர் அலறியடித்து ஓடவே அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

தொடர்ந்து போதை ஆசாமியின் அட்டூழியம் அதிகரிக்கவே உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவனை எச்சரித்து அனுப்பி, பாம்பை மீடடு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இறுதியில் பாம்பு காட்டுப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment