Connect with us

அறிவையும், குழந்தைப்பேற்றையும் தரும் திருச்செந்தூர்-ஆலயம் தேடி….

ஆன்மீகம்

அறிவையும், குழந்தைப்பேற்றையும் தரும் திருச்செந்தூர்-ஆலயம் தேடி….

df7140aa21276e66361f8f3ba4dea571

தைக்கிருத்திகையான இன்று நம் ஆலயம் தேடி பகுதியில் பார்க்கப்போறது திருச்செந்தூர் ஆலயத்தினை.. இது முருகன் திருத்தலம் மட்டுமல்ல! குருபகவான் பரிகாரத்தலமாகவும் இருக்கு. குருபகவானுக்கு அதிபதி எம்பெருமான் முருகன். அதனால், அறிவு சம்பந்தமான குறைபாடுகள் நீங்க, கல்வியில் சிறந்து விளங்கவும், பணியில் சிறப்புற பணியாற்ற நாம் செல்ல வேண்டிய கோவில் திருச்செந்தூர் செந்திலாண்டவர் ஆலயமாகும்.

அறுபடை வீடுகளில், ”குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்” என்ற சொல் வழக்கிற்கு ஏற்ப திருசெந்தூரைத் தவிர, ஏனைய அனைத்துப் படைவீடுகளும் குன்றுகளின் மீதும், திருச்செந்தூர் மட்டும் அழகிய கடலோரத்திலும் அமைந்திருக்கின்றன. கடற்கரையில் இருந்து இத்திருக்கோயிலைக் காணும்போது இக்கோயிலின் தோற்றம் பேரழகு. அங்கே ஆர்ப்பரிக்குக்கும் அலைகள் ஓம் ஓம் ஓம் என முருகனை நினைத்து அவன் பாதம் தேடிவருவதாகவே தோன்றுகிறது. அந்த வெள்ளை நுரை அலைகள் செய்த பாக்கியம் தான் என்ன?! நாள்தோ றும் தமிழ்கடவுளாம் முருகனை தரிசிக்கும் பேறு பெற்றுள்ளது!!

a207f499fd9371da56ddbf70fde2b837

முன்னொரு காலத்தில் தேவர்கள் அனைவரும் இந்திரனின் தலைமையில் ஒன்று கூடி சிவபபெருமானையும், பார்வதி தேவியையும் காண கைலாயத்திற்குச் சென்றனர. தங்களை அசுரர்களிடம் இருந்து காக்க, ஒரு சிறந்த வீரனைத் தந்தருளும்படி கேட்டனர். அவர்களது வேண்டுகோளை ஏற்ற சிவப்பிரான், சத்யோஜாதம், வாமதேவம், சத்புருஷம், ஈசானம், அகோரம், ஆகிய ஐந்துமுகங்கள் மட்டுமல்லாது, ஞானிகளுக்கு மட்டுமே புலப்படும் அதோமுகத்தினையும் சேர்த்து ஆறுமுகங்களோடு காட்சி அளித்தார். அத்தருணத்தில் அவரது ஒவ்வொரு திருமுகத்திலும் இருந்த ஒவ்வொரு நெற்றிக் கண்ணிலிருந்தும் ஒரு ஜோதி உருவானது. இவ்வண்ணம் தோன்றிய ஜோதிப் பொறிகளை ஒன்றுசேர்த்து, ஓர் அக்னிப் பிழம்பாக ஆக்கி வாயுதேவனிடமும், அக்னி பகவானிடமும் தந்து கங்கா தேவியிடம் சேர்த்துவிடும்படி பணித்தார்.
எல்லையற்ற ஆனந்தத்துடன் அதனை ஏற்ற கங்காதேவி, இமயமலையில் உள்ள சரவணப்பொய்கையில் கொண்டு சேர்த்தார். அந்த அக்னிக்குஞ்சுகள் கற்பனைக்கெட்டாத அழகான குழந்தைகளாகத் தெரிந்தன விஷ்ணு பகவானுக்கு.கார்த்திகை நட்சத்திரங்களாக விளங்கும் கார்த்திகைப் பெண்களை அழைத்து அந்த தெய்வீகக் குழந்தைகளுக்குப் பாலூட்டுமாறு கூறினார். இவ்வாறு கார்த்திகைப் பெண்களின் அன்பில் வளர்ந்து வந்த இக்குழந்தைகளை சிவனும், பார்வதியும் வந்து பார்த்தனர். அன்பின் மிகுதியால் பார்வதி அக்குழந்தைகளை எடுத்து அணைத்தபோது ஆறு குழந்தைகளும் ஒன்று சேர்ந்து, ஆறு முகங்களுடனும், பன்னிரண்டு கரங்களுடனும், ஓர் உருவத்தில் காட்சி தந்து கந்தன் என்ற பெயருடன் விளங்கினார்.  கார்த்திகைப்பெண்கள் வளர்த்ததினால் கார்த்திகேயன் என்ற பெயரையும் பெற்றார்.
காசியப முனிவருக்கு சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் என்ற மூன்று மகன்களும், அஜமுகி என்ற மகளும் பிறந்தனர். அசுர குணத்துடனேயே பிறந்த இவர்கள் தங்களது குருவின் சொல்படி கடும்தவங்கள் புரிந்து பல்வேறு சக்திகளைப் பெற்றனர். இத்தகைய பொல்லாத சக்திகளைக் கொண்டு மூவுலகிலும் எல்லா மக்களையும் ஆட்டிப் படைத்தனர்.

சூரியன், சந்திரன், எமன், குபேரன், இந்திரன், அக்னிதேவன், தேவர்கள் போன்றோர் சூரபத்மனுக்கு அடிமைகள் போல செயல்பட வேண்டியிருந்தது. இதனைக் கண்டு பொறுக்காமல், சிவன், முருகனை அழைத்து இவ்வுலகத்தை தீய சக்திகளிடம் இருந்து காக்கும்படி ஆணையிட்டார். 

a6ab58e2aa83dbbb0813323c05d7c570

தனது தந்தையின் ஆணைப்படி தனது படைகளுடன், மாயபுரிக்குச் சென்ற கந்த பிரான் தன் படைத் தளபதி வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பினார். தூதுவனையும் தூற்றி அனுப்பினான் அந்த அசுரன். கார்த்திகேயன் படைப்பரிவாரங்களுன் தங்கி இருந்த இடமே திருச்செந்தூர்.தேவர்களை சிறைப்பிடித்த சூரபத்மன், அவர்களை விடுவிக்குமாறு முருகன் எத்தனை கேட்டும் செய்யவில்லை. அவர்களைக் காக்க இறைவன் அசுரர்கள் மீது படையெடுத்து போர்புரிந்த இடமும் இந்த திருசெந்தூர்தான். நீண்ட போருக்குப் பின் தர்மத்தை வென்றார் முருகன். கடம்பன், கதிர்வேலன் வீசிய வேல் சூரபத்மனின் தேகத்தை இரு கூறுகளாக்கியது. இவ்வாறு பிளவுப்பட்ட சூரனது உடலின் ஒரு பகுதி சேவலாகவும், மறுப்பகுதி மயிலாகவும் உருமாறியது. கருணைக் கடலான கந்தன் சேவலை தனது கொடியிலும், மயிலைத் தனது வாகனமாக கொண்டு சூரனை ஆட்கொண்டார். 

96fefe545ae310a788c47b960bb8b95a

 முத்துக்குமரனின் திருப்பாதங்கள் பட்ட இடம் தான் இந்த திருச்செந்தூர். பல அரிய நம்மால் காணமுடியாத சூட்சுமங்களைக் கொண்ட பகுதி இந்த திருச்செந்தூர் கடற்பகுதி. இந்த கடல் பகுதிக்கு சண்முக விலாசம் என்ற பெயருண்டு. இங்கே 24 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. இவை காயத்திரி மந்திரத்தின் 24 எழுத்துக்களைக் குறிப்பதாகச் சொல்கிறார்கள்.

ஐப்பசி மாத வளர்பிறை அன்று சூரனை வதம் செய்து வெற்றி கொண்ட தினம் என்பதால், இங்கே நடைபெறும் சூரசம்ஹார விழா மற்றும், கந்த சஷ்டி விழாவிற்கு பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் கடல் போல வருகின்றனர்.ஆவணி மற்றும் மாசி மாதங்களில் இக்கோயிலில் நடைபெறும் திருவிழாவின்போது 7-ம் நாள் மாலை வேளையில் சிவப்பு நிற ஆடை உடுத்தி சிவப்பிரானின் அம்சமாகவும், அடுத்தநாள் 8-ம் நாள் அதிகாலை வேளையில் வெள்ளை நிற ஆடை உடுத்தி பிரம்மாவின் வடிவமாகவும், அன்றே மதிய வேளையில் பச்சை நிற ஆடை உடுத்தி விஷ்ணுவின் அம்சமாகவும் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

d75ff36bca81c5d988a7f259f770f159

திருச்செந்தூரில் முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும்போது, பன்னீர் இலையில் தான் தருவார்கள். முருகன் ஒருபக்கத்திற்கு ஆறு கரங்கள் என 12 கரங்கள் கொண்டவன்.அது போலவே பன்னீர் மரத்தின் இலைகளிலும் ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என ஈராறு பனிரெண்டு நரம்புகள் இருக்கும். பன்னிருக்கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னிரு திருக்கரங்களாலேயே  விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகமாகும். அதனால் இது பன்னீர் செல்வம் என்றும் பெயருண்டு
இந்த திருக்கோயிலில் முருகனுக்கு நான்கு உற்சவ தோற்றங்கள் உண்டு. இவர்களுக்கு தனித்தனியே சன்னதிகள் உண்டு. சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் போன்றோர் உற்சவர்கள். குமர விடங்கருக்கு மாப்பிள்ளை சுவாமி என்ற பெயரும் உண்டு. இத்திருக்கோயில் கடற்கரையில் அமைந்துள்ள ”சந்தன மலை”யின் மேல் அமைந்துள்ளது. நாளடைவில், காலப் போக்கில் அது மறைந்து விட்டது. இவ்விடத்தை கந்த மாதன பர்வதம் என்றும் அழைக்கிறார்கள்.

இத்திருத்தலம் ”குரு பரிகார” தலமாகவும் விளங்குகிறது. சூரனை அழிக்க கந்தன் இங்கு வந்த போது முருகனுக்கு அசுரர்களின் வரலாற்றை குருபகவான் அருளியுள்ளார். திருசெந்தூரிலேயே கோயில் கட்டி இங்கேயே முருகனை இருக்கச் சொல்லியுள்ளார். இத்தலத்தில் கார்த்திகேயன் ”ஞானகுரு”வாக விளங்குவதால், குருபெயர்ச்சி விழாவும் இங்கே சிறப்பாக நடைபெறுகிறது. எல்லா கிருத்திகைகளின்போதும் இங்கு பக்தர்கள் குவிந்தாலும், தைக்கிருத்திகை, ஆடிக்கிருத்திகை தினங்களில் காவடி எடுத்து, அலகு குத்தி என பக்தர்கள் உலகெங்கிலுமிருந்து வந்து குவிகின்றனர்.

இத்தைக்கிருத்திகை நாளில் முருகனை வணங்கி, கல்வியறிவும், உடல நலமும், நற்குழந்தைப்பேறும் கிடைக்கும்.

ஓம் முருகா!! ஓம் முருகா!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in ஆன்மீகம்

To Top