சைக்கோ த்ரில்லர் படத்தில் ஆர்கே சுரேஷிற்கு ஜோடியான ஆனந்தி…!
கயல் படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான நடிகை ஆனந்தி தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்தாண்டு திடீரென திருமணம் செய்து கொண்டு இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என கூறி இருந்தார். இந்நிலையில் ஆனந்தி நடிக்க உள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் கலக்கி வருபவர் தான் ஆர்கே சுரேஷ். இவர் பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியிருப்பார். இதனை தொடர்ந்து மருது படத்திலும் வில்லனாக நடித்த ஆர்கே சுரேஷ் சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் தற்போது ஒயிட் ரோஸ் என்ற புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதற்கான அறிவிப்பு பொங்கல் அன்று வெளியானது. இந்த படத்தில் ஆர்கே சுரேஷ் தவிர இன்னொரு நாயகனாக ரூசோ நடிக்கிறார். இதில் தான் நாயகியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் ராஜசேகரன் இயக்குகிறார்.
ஒயிட் ரோஸ் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஆர்கே சுரேஷின் ஸ்டூடியோ 9 நிறுவனமும், ரூசோவின் வெற்றி அரசு நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. மருத்துவமனையில் உள்ள பிணவறையில் நடந்த சில உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறதாம்.
சைக்கோ திரில்லர் படமான இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாம். நிச்சயம் இப்படம் ஆர்கே சுரேஷ் மற்றும் ஆனந்தி ஆகியோருக்கு நல்ல ஹிட் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
