ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27-ம் தேதி நடந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்தது. தற்போது வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,039 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரான கே.எஸ். தென்னரசுவை 66,397 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதனிடையே அதிமுக வேட்பாளரான கே.எஸ். தென்னரசு டெபாசிட் இழப்பார் என்ற பேச்சு அடிபட்டு வந்தது. குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்னதாக ஈரோடு பூத் ஏஜெண்ட்களை நேரடியாக தொடர்பு கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் வேட்பாளர் அதிக வாக்குகளை பெற்றால் மட்டும் போதாது அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழக்க வேண்டும் என்றும், அது தான் உண்மையான வெற்றி என்றும் தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகின.
அதற்கு ஏற்றார் போலவே கே.எஸ்.தென்னரசுவும் வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பம் முதலே பின்னடைவை சந்தித்து வந்தார். டெபாசிட் இழக்காமல் இருக்க 28 ஆயிரத்து 365 வாக்குகள் தேவை என்ற நிலை இருந்த போது, 28 ஆயிரத்து 638 வாக்குகள் பெற்று தப்பியுள்ளார். இது தோல்வியால் துவண்டு போன அதிமுக தொண்டர்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.