ஸ்விக்கி, ஜூமோட்டோ நிறுவனங்கள் இதைப் பயன்படுத்த தடை… தமிழக அரசு உத்தரவு!
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை பயன்படுத்த ஸ்விக்கி, ஜூமோட்டோ உள்ளிட்ட ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2022ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 100 மைக்கிரான்களுக்கு குறைவான பிளாஸ்டிக் பேனர்கள், தட்டுகள், கோப்பைகள், 75 மைக்கிரான் தடிமனுக்கு கீழ்வுள்ள பிளாஸ்டிக் கை பை மற்றும் 60 கிராம் அளவிற்கு கீழ் நெய்யப்படாத பிளாஸ்டிக் பைகள், 120 மைக்கிரான் தடிமனுக்கு கீழ்வுள்ள பிளாஸ்டிக் கைப்பைகள் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்கள் தடையை நடைமுறைப்படுத்தும் விதமாக அவ்வப்போது அதிகாரிகள் கடைகள், வணிக நிறுவனங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு அபராதம் விதித்து வருகின்றனர். இதை வெற்றிகரமாக செயல்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய “மக்கள் இயக்கம்” தொடங்க உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் டெலிவரி நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட ‘சிங்கிள் யூஸ்’ பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என தமிழக சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ அந்நிறுவனங்களுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில்,” ஸ்விக்கி, ஜூமோட்டோ, அமேசான், பிளிப்கார்ட், சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளிட்டவை ஒருமுறை பயன்படுத்தக்கூடும் ‘சிங்கிள் யூஸ்’ பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு கடிதம் எழுதியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
