சமீபத்தில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படம் மாபெரும் வெற்றி பெற்றது. செம்மர கடத்தலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அல்லு அர்ஜூன் தவிர படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
மேலும் பிரபல நடிகை சமந்தா இந்த படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். இந்த பாடலுக்காகவே ஏராளமான ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்து புஷ்பா படத்தை பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரே பாடலில் சமந்தா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார்.
தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் ஒரு பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா படம் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்தது. விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் புஷ்பா படம் நேற்று அதாவது ஜனவரி 7ம் தேதி இரவு 8 மணிக்கு அமேசான் பிரைம் ஒடிடியில் வெளியாகியுள்ளது. தியேட்டரில் மாபெரும் வெற்றி பெற்ற புஷ்பா படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் சுமார் 30 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது படங்கள் தியேட்டரை விட ஓடிடியில் தான் அதிகளவில் வெளியாகி வருகின்றன. அப்படியே தியேட்டரில் வெளியானாலும் சில நாட்களிலேயே ஓடிடியில் வெளியாகி விடுகிறது. ஓடிடி விற்பனை மூலம் தனி லாபம் கிடைப்பதால் தயாரிப்பாளர்களும் ஓடிடியில் வெளியிட விரும்புகிறார்கள்.