அஜித் பெயரில் நடந்த திடுக்கிடும் மோசடி.. லட்சக்கணக்கில் ஏமாந்த இளம்பெண்!

அஜித் பெயரில் நடந்த மோசடியில் லட்சக்கணக்கில் ஏமாந்த பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் அஜித்துக்கு தமிழகத்தில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு என்பதும் ஆனால் அதே நேரத்தில் அஜித் கடந்த பல மாதங்களுக்கு முன்பே தனது ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டார் என்பதும் தெரிந்ததே.

ரசிகர் மன்றம் என்ற அமைப்பு இல்லாவிட்டாலும் அஜித் ரசிகர்கள் அவரது பெயரில் பல்வேறு உதவிகள் செய்து வருகிறார்கள் என்பதும் அஜித்தின் பிறந்தநாள் தினத்தன்றும், அஜித் படம் வெளியாகும் தினத்தன்றும் ஏழை எளிய மக்களுக்கு அஜித் ரசிகர்கள் உதவி செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அஜித் ரசிகர் மன்றம் சார்பில் ஏழைகளுக்கு வீடு கட்டித் தருவதாக திருநெல்வேலி அஜித்குமார் நற்பணி மன்றம் பணம் வசூல் செய்ததாக தெரிகிறது. இந்த திட்டத்தில் அஜித் ரசிகை ஒருவர் 1.10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாக தெரிகிறது .

ஆனால் அதன் பின்னர்தான் அஜித்குமார் பெயரில் நற்பணி மன்றம் என்பதே இல்லை என்பதை அறிந்து அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அஜித் பெயரில் லட்சக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் அஜித் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.